தமிழ்நாட்டில் மட்டும் 1,317 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 1,317 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிவேகத்தில் உயர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இருப்பினும் மக்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. உலக பொருளாதாரத்தில் தங்கம் இல்லையேல் வணிகம் இல்லை என்ற நிலை இருக்கிறது. இதனால் பல்வேறுக் காரணங்களுக்காக இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்திவருவது தொடர்ந்து நடந்துக் கொண்டே தான் வருகின்றன. ரயில் நிலையம், விமான நிலையம், கடல் மார்க்கம் என பல வழிகளில் தங்கம் கடத்தி வருபவர்களை சுங்க அதிகாரிகள் அவ்வப்போது கைது செய்வதும் தொடர்கதைதான்.
தங்கத்தை வாங்குவதில் உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2021-2022-ம் ஆண்டில் சுமார் ரூ.3.44 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியாவின் பணக்காரர்கள் பலர் அதனை தங்கமாக மாற்ற ஆசைப்படுவதாலும் தங்க நுகர்வு இந்தியாவில் அதிகமாக உள்ளது. இப்படி தங்கத்தின் தேவை இந்தியாவில் அதிகமாக இருப்பதால் துபாய், சிங்கப்பூர் போன்ற தங்கத்தின் விலை குறைவாக உள்ள நாடுகளில் இருந்து கடத்தல்காரர்கள் தங்கத்தை இந்தியாவுக்கு பல வழிகளில் கடத்தி வருகிறார்கள். வெளிநாடுகளிலிருந்து ரயில் நிலையம், விமான நிலையம், கடல்மார்க்கம் என பல வழிகளில் தங்கம் கடத்தி வருபவர்களை சுங்க அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்தும், தங்கத்தை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
இதுபோன்ற கடத்தலில் கடந்த 3 ஆண்டுகளில் பிடிபட்ட தங்கம் பற்றிய விவரங்களை பாரத ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர், பத்ம விபூஷண் விருது பெற்ற நடனக்கலைஞர் சோனல் மான்சிங் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்டு இருந்தார். இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில் கடந்த 3 ஆண்டுகளில் (2020 முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை) இந்தியா முழுவதும் சுமார் 9 ஆயிரம் கிலோ, அதாவது 8 ஆயிரத்து 956 கிலோ 490 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டிலேயே அதிக அளவு கடத்தல் தங்கம் கடந்த 3 ஆண்டுகளில் கேரளாவில் தான் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு ஆயிரத்து 869 கிலோ 290 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஆயிரத்து 317 கிலோ 430 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து மராட்டிய மாநிலத்தில் ஆயிரத்து125 கிலோ 380 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
வழக்குகளை பொறுத்தவரை நாடு முழுவதும் தங்கம் கடத்தல் தொடர்பாக 9 ஆயிரத்து 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 2,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தங்கம் கடத்தலைத் தடுக்க புலனாய்வு அமைப்புகள் ரகசிய தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன' என்றும் மத்திய இணை அமைச்சர் அதில் தெரிவித்துள்ளார்.