ஏராளமானோர் வந்து குழந்தையை பார்த்து வாழ்த்துத் தெரிவித்தனர்
இந்தியாவிலேயே முதன்முறையாக மூன்றாம் பாலின தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு ’சபியா சஹாத்’ என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
இந்தியாவிலேயே முதன் முறையாக கேரள மாநிலம், கோழிக்கோட்டில் சஹாத்- ஜியா மூன்றாம் பாலின தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது.திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சஹாத் பெண்ணாகப் பிறந்து ஆணாகவும், மலப்புரத்தைச் சேர்ந்தவர் ஜியா பவல் ஆணாகப் பிறந்து பெண்ணாகவும் மாறியவர்.
கோழிக்கோடு உம்மாலத்தூரில் இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதை உணர்ந்த இந்த தம்பதி, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, சிசேரியன் மூலம் கடந்த மாதம் 8ம் தேதி கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் குழந்தையை பெற்றெடுக்கும், முதல் மூன்றாம் பாலினத்தவராக உருவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், சஹாத் மற்றும் சியா தம்பதியினரின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளனர். குழந்தைக்கு ‘சபியா சஹாத்’ என பெயரிட்டுள்ளனர்.கோழிக்கோடு தொண்டையாட் ஏஜிபி கார்டனில் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. ஏராளமானோர் வந்து குழந்தையை பார்த்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
முன்னதாக, தங்களுக்கு பிறந்த குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் அறிவிக்க தம்பதி மறுத்துவிட்டனர். மேலும் தங்கள் குழந்தை வளர்ந்த பின்னர் பாலினம் குறித்த புரிதல் ஏற்படுத்தப்படும் என தெரிவித்திருந்தனர்.
ஜியா நடன ஆசிரியையாகவும், சஹாத் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராகவும் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.