மணீஷ் சிசோடியாவை விசாரணைக்குப்பின் அமலாக்கத்துறை நேற்று கைது செய்தனர்.
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாள் அமலாக்கப்பிரிவு காவல் அளித்து கோர்ட் உத்தரவிடப்பட்டுள்ளது .
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்தது. பின்னர் மத்திய புலனாய்வு பிரிவு அமைப்பு அவரை நீதிமன்றத்தின் அனுமதி மூலம் விசாரணை நடத்தியது. மணீஷ் சிசோடியாவை காவலில் எடுத்து 7 நாள்கள் விசாரணை நடத்தியது.
பின்னர், மணீஷ் சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாள்கள் அவரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
திகார் சிறையில் வைத்து மனீஷ் சிசோடியாவிடம் விசாரணை செய்யப்பட்டது. அப்போது அவர் கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், "டெல்லியில் கல்வி அமைச்சராக பணியாற்றிய போது ஆட்சித்தலைவர்கள் மாணவர்களுக்குச் சிறந்த கல்வி மற்றும் கல்லூரிகளை ஏற்பாடு செய்யாதது ஏன்? என்ற கேள்வி எனக்குப் பலமுறை இருந்துள்ளது. ஆனால், இப்போது அந்த கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது. மாணவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதைக் காட்டிலும் , அரசியல் கட்சியின் தலைவர்களைச் சிறையில் அடைப்பது எளிதான காரியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த கடிதத்தில்,"பாஜக ஆளும் மாநிலங்களில் கூட அரசுப் பள்ளிகளில் மோசமாக நிர்வாகம் செய்யப்படுவதால், கல்வியைத் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்துகின்றனர். எதிர்க்கட்சியின் தலைவர்களை எளிதாகச் சிறையில் அடைக்கலாம். ஆனால், எதிர்காலமானது கல்வி சார்ந்த அரசியலாகும். அதனை உணருங்கள்"என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சிபிஐ வழக்கில் திகார் சிறையிலிருந்த மணீஷ் சிசோடியாவை, விசாரணைக்குப் பின் அமலாக்கப்பிரிவு நேற்று கைது செய்தது. இதனையடுத்து இன்று, மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாள்கள் அமலாக்கத்துறை காவல் அளித்து டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.