எருமை மாட்டை பிடிக்க முயன்ற இளைஞர் உயிரிழந்த பரிதாபம்
கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட எருமை மாட்டை பிடிக்க முயன்ற இளைஞர் பரிதாபமாக பலியானார்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் மொக்ரல்புதூருக்கு அவ்வப்போது இறைச்சிக்காக எருமை மாடுகள் வாகனத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அந்தவகையில், மொக்ரல்புதூர் பகுதிக்கு இறைச்சிக்காக எருமை மாடுகள் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, வாகனத்தில் இருந்த ஒரு எருமை மாடு கீழே குதித்து தப்பி ஓடியது. மேலும், சாலையில் இருந்த கடைகளை தனது கொம்பால் முட்டிமோதி உடைத்தது. அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களையும், அந்த பகுதியில் உள்ள வீடுகளையும் தும்சவசம் செய்தது.
தகவல் அறிந்த தீயணைப்புபடை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்கள் உதவியோடு அந்த எருமை மாட்டை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.
அப்போது, எருமைமாடு முட்டியதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாதிக் என்பவர் குடல் சரிந்து உயிருக்கு பாேராடினார். ஆம்புலன்ஸ் உதவியோடு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும்வழியிலேயே சாதிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே, சுமார் மூன்று மணி நேர தொடர்போராட்டத்திற்கு பின்னர் எருமை மாட்டை தீயணைப்பு படை வீரர்கள் லாவகமாக பிடித்தனர். இதனால், அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.