குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.470 மதிப்புள்ள பொங்கல் பரிசு - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.!
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் தேவை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, அரசின் மாதாந்திர உதவித்தொகை ஏதும் பெறாத 21 முதல் 55 வயதுக்குள் இருக்கும் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருந்தோம்.
இத்திட்டம் வரும் பொங்களுக்குள் தொடங்கப்படும். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விரை லிட்டருக்கு ரூ.34-ல் இருந்து ரூ.37 என உயர்த்தி கொள்முதல் செய்யப்படும்.
மேலும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை இனி மாதந்தோறும் 5% ஊக்கத்தொகை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என கூறினார்.
மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தீவனம் தருவதற்காக அவர்களின் வங்கிகணக்கில் பணம் செலுத்தவுள்ளோம்.இதற்கு ரூ. 4.5 கோடி ஒதுக்கியுள்ளோம்.
விவசாயிகள் கறவை மாடுகளை வாங்கி பால் உற்பத்தி செய்து பாண்லேக்கு தந்தால் 50 சதவீத மானியம் தருவோம். இதற்கு முதல்கட்டமாக ஆயிரம் மாடுகள் வாங்க மானியம் தரவுள்ளோம் என கூறினார்.
மேலும் பொங்கலையொட்டி, அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ. 470 மதிப்புள்ள பொங்கல் பொருட்கள் அங்கன்வாடி மூலம் தரப்படும்.இதற்கு ரூ. 17.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரேஷன்கடைகளைத் திறந்து பொருட்களை தருவதுதான் அரசின் எண்ணம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நான்கு மாத அரிசி பணம் சிவப்பு அட்டைத்தாரர்களுக்கு ரூ. 2400ம், மஞ்சள் அட்டைத்தாரர்களுக்கு ரூ. 1200ம் பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதற்கு ரூ. 67 கோடி ஒதுக்கியுள்ளோம் என கூறினார்.
மாநில அந்தஸ்து பெற வரும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம்.மத்திய அரசை கேட்போம். அனைத்து எம்எல்ஏக்களையும், அமைப்பினரையும், அனைவரையும் டெல்லி அழைத்து சென்று பிரதமரை சந்திப்போம்.
தொடர்ந்து போராடி கேட்டுக் கொண்டிருந்தால்தான் கிடைக்கும். சுதந்திரம் உட்பட எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் தேவை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மாநில அரசு எங்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.