உம்மன்சாண்டிக்கு எதிரான பாலியல் புகார் - சி.பி.ஐ. அறிக்கை சொல்வது என்ன?
சரிதா நாயரின் குற்றச்சாட்டில் உண்மையில்லை
திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சராக காங்கிரஸைச் சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தபோது சோலார் பேனல் முறைகேடு விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.
நடிகை சரிதா நாயர் பிஜு ராதாகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து சூரிய மின்சக்தி உற்பத்திக்காக ஒரு போலி நிறுவனம் நடத்தி, முக்கிய அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தி, அந்த செல்வாக்கைக் கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக திரிச்சூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஒருவர் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவை நீதிபதி எஸ்.எஸ்.வாசன் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதி விசாரித்து, உம்மன்சாண்டி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். ஆனால் அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் உம்மன்சாண்டி முறையிட்டார். அதைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சரிதா நாயர், டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சூரிய மின்சக்தி ஊழல் வழக்கில் பெரும்பாவூர் போலீஸ் காவலில் இருந்தபோது, 2013ம் ஆண்டு, ஜூலை மாதம் 19ம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அனைத்தும் முற்றிலும் சரியானது என கூறினார்.
உம்மன் சாண்டி தனது ‘கிளிப் ஹவுஸ்' இல்லத்தில் பாலியல் ரீதியில் துன்புறுத்தினார். அவரை ஒரு தந்தை ஸ்தானத்தில் பார்த்து வந்த தருணத்தில், அவர் இவ்வாறு நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த கடிதத்தில் எழுதியதை மறுக்கவில்லை. அந்த கடிதத்தை எழுதியது நான்தான்" என தெரித்திருந்தார்.
மேலும் உம்மன் சாண்டிக்கு அவரது உதவியாளர்கள் மூலம் பல்வேறு தருணங்களில் 2 கோடியே 16 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், 2016ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் சரிதா நாயர் குறிப்பிட்டார்.
ஆனால் இதனை மறுத்த உம்மன் சாண்டி, தான் தவறான முறையில் நடந்ததாக கூறப்படுவது அடிப்படை ஆதாரம் அற்றது என கூறினார்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ நடத்திய விசாரணையில், உம்மன்சாண்டிக்கு எதிரான பாலியல் புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.