பிஎப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களாக என்ஐஏ, வருமான வரித்துறை. உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகள் சோதனை நடத்தி வருகின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் 8 மாநிலங்களில் பி.எப்.ஐ. நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர் . அப்போது 200க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அமைப்பிற்கு எதிராக கைது நடவடிக்கைகள், ரெய்டுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 1000க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள், என்ஐஏ அதிகாரிகள் களமிறக்கப்பட்டனர். பல இடங்களில் மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து இந்த ஆபரேஷனை மேற்கொண்டன.
இதையடுத்துதான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
சரி இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..முதலில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள காரணங்களை பார்க்கலாம்.
"இந்த அமைப்பு கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற துணை அமைப்புகளை உருவாக்கி உள்ளதாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இப்படி பல துணை அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் பலரை அமைப்பில் சேர்த்துள்ளது.
ஏராளமான குழுக்களை இந்த அமைப்புகள் மூலம் உருவாக்கி அதன்மூலம் சட்ட விரோதசெயல்கள், கூட்டங்கள், திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர் . இதன் மூலம் மாணவர்கள், பெண்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என்று பலரை சந்தித்து அவர்களை தங்கள் குழுவிற்குள் இணைத்து உள்ளனர்.
இவர்கள் வெளிப்படையாக சமூக சேவை அமைப்பு போல செயல்பட்டாலும், உள்ளே ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களை செய்து வருகின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். முக்கியமாக குறிப்பிட்ட சமுதாய மக்களை ஓரம்கட்டி, அவர்களை தவறான திசைக்கு கொண்டு செல்கிறார்கள். இவர்கள் நீதிக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலம் நாட்டின் அமைதிக்கு கேடு விளைவிக்கிறார்கள்.
அமைதியை கெடுக்கும் விதங்களில் பல்வேறு திட்டங்களை இவர்கள் வகுத்து வருகிறார்கள். வங்கதேசத்தில் இருக்கும் முஜாகிதீன் அமைப்பிற்கும், ஐஎஸ்எஸ் அமைப்பிற்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பு உள்ளது. இந்த அமைப்பில் உள்ள சிலர் சர்வதேச அளவில் தீவிரவாத இயக்கங்களில் இணைந்து உள்ளனர். இவர்கள் நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அமைப்பு மீது தடை விதிக்க வேண்டும் என குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடக மாநில அரசுகளும் பரிந்துரை செய்தது. இவர்களின் வருமானம் மீது சந்தேகங்கள் இருந்த காரணத்தால், அவர்களின் வருமான வரி ரிஜிஸ்டிரேஷனையும் நிதித்துறை ரத்து செய்தது. மேலும் அந்த அமைப்புக்கு வ ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அவர்களுடன் தொடர்பு கொண்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்புக்கும் தடை விதிக்கிறோம்" என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். அப்போது. ". ஃபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கம் மிகவும் ஆபத்தானது. மனித உரிமை, அரசியல், மாணவர் இயக்கங்கள் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்படுகிறது. நாட்டை சீர்குலைப்பதுதான் ஃபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நோக்கம்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பிஎப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் ரகசியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.