டீமேட் கணக்கில் தொப்பென விழுந்த ரூ.11,677 கோடி: ரூ.5 லட்சம் லாபம் பார்த்த கில்லாடி ஆசாமி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ரமேஷ் சாகர் கடந்த ஆறு ஆண்டுகளாக பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்பு, அவர் கோடக் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தில் தனது டீமேட் கணக்கைத் தொடங்கினார்.
இந்த நிலையில் வங்கியில் ஏற்பட்ட சிறுகோளாறு காரணமாக இந்த ஆசாமியின் டீமேட் கணக்கில் தவறுதலாக ரூ.11,677 கோடி பணம் தொப்பென விழுந்தது.
இவ்வளவு பெரிய தொகை தனது கணக்கில் கிடந்ததை பார்த்து திகைத்துப் போன ஆசாமி சற்றும் தாமதியாமல் அதில் இருந்து ரூ.2 கோடியை பங்குச்சந்தையில் முதலீடு செய்து ரூ.5 லட்சம் லாபம் பார்த்து விட்டார்.
சுமார் 8 மணி நேரம் வரை வங்கி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு அன்று மாலையே கோடக் செக்யூரிட்டீஸ் மூலமாக அந்த ஆசாமியிடம் இருந்து அந்த தொகையை திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால் கோடக் செக்யூரிட்டீஸ் இது குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
அன்றைய தினத்தில் ரமேஷ் சாகர் மட்டுமல்ல வேறு சிலரும் இதே போன்ற ஜாக்பாட்டை அனுபவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.