163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடக்கம்...!

163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடக்கம்...!

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.20 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்பட்ட நிலையில் இன்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று விளையாட்டு வீரர்கள், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், அந்தமான் நிகோபர் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் என்று சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டுகளில் ஆன்லைன் வழியே கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், இந்த முறை நேரடியாக நடைபெறுகிறது. மிக அதிகபட்சமாக சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் 1,106 இடங்களில் சேர 95,136 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சிறப்புப் பிரிவு கலந்தாய்வுக்கே நூற்றுக்கணக்கானோர் அழைக்கப்பட்டுள்ளதாகவும், போட்டி அதிகமாக இருப்பதால் முழுவதும் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், எந்த வித புகாருக்கும் இடம் தராமல் சேர்க்கையை நடத்தி முடிக்க உள்ளதாகவும் மாநிலக் கல்லூரியின் முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார்.

மாநிலக் கல்லூரியில் பயில வேண்டும் என்ற விருப்பம் காரணமாக கலந்தாய்வில் பங்கேற்றுள்ளதாகவும், கண்டிப்பாக தங்களுக்கு இடம் கிடைக்கும் என்றும் மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். தொடர்ந்து 8 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்