"கியூட்” இளங்கலை பட்டப்படிப்பு நுழைவுத்தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ரத்து - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு தொழில்நுட்ப காரணமாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த தேர்வின் முதல் கட்ட தேர்வு கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து, 2 ஆம் கட்ட நுழைவுத் தேர்வு நேற்றைய தினம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் 2 கட்டமாக இந்த தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் முதல் கட்டமாக நடைபெற்ற தேர்வில், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், மேலும், பிற்பகலில் 2 - வது கட்டமாக நடைபெற இருந்த தேர்வு அனைத்து மையங்களிலும் ரத்து செய்யப்படுவதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, வருகிற 12 ஆம் தேதியும், ரத்து செய்யப்பட்ட தேர்வு 12 மற்றும் 14 ஆம் தேதியும் நடத்தப்படும் எனவும், இந்த தேர்விற்காக விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட ஹால்டிக்கெட்டை கொண்டு வந்து தேர்வை எழுதுமாறும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்