சமீப காலமாக இளைஞர்களிடையே ட்ரெண்டாக பரவி வந்த டிக் டாக், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துவோரை அடிமையாக்கியது.
சமீப காலமாக இளைஞர்களிடையே ட்ரெண்டாக பரவி வந்த டிக் டாக், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துவோரை அடிமையாக்கியது. தங்களுக்கு பிடித்த பாடல்களுக்கு நடனம் ஆடியும் பிடித்த வசனங்களை டப் செய்தும் சமூக வலைதளங்களில் பதிவிட இந்த ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த தொடங்கப்பட்ட இந்த ஆப், சமீபகாலமாக ஆபாசங்களுக்கு வழிவகுப்பதாக இருந்ததால்,டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து டிக் டாக்கை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளே ஸ்டோர் நீக்கியது. இதனை எதிர்த்து அந்நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மனுவை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என மதுரைக்கிளைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை பிளே ஸ்டோர் மீண்டும் கொண்டு வந்துள்ளது.