மேகதாது - கர்நாடகவின் விண்ணப்பம் நீக்கம்!

மேகதாது - கர்நாடகவின் விண்ணப்பம் நீக்கம்!

மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரிய மனுவை சுற்றுச்சூழல் துறை பரிசீலனையில் இருந்து நீக்கியுள்ளது.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் சுமூகமாக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் மேகதாது அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை ஜல்சக்தித் துறை மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் இறுதி செய்தால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதிக்கான ஆய்வு எல்லைகளை வழங்க முடியும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி விண்ணப்பம் செய்திருந்தது. இந்த விண்ணப்பத்தை 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிசீலித்தது.

 

அப்போது அணை தொடர்பாக இரண்டு மாநிலங்களுக்கிடையே சுமூகமான தீர்வு ஏற்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய முடியும் என மதிப்பீட்டுக்குழு முடிவு செய்தது. இதனிடையே, கடந்த 11ம் தேதி மேகதாது அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை ஜல்சக்தித் துறையும் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் இறுதி செய்தால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதிக்கான ஆய்வு எல்லைகளை வழங்க முடியும் என்பதால் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து சுற்றுச்சூழல் துறை தற்போது நீக்கியுள்ளது.

 

காவிரிக்கு குறுக்கே புதிதாக மேகதாது பகுதியில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு டெல்டா விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழ்நாடு அரசு மேகதாது அணைத் திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்