இலங்கை நிதியமைச்சர் பதவியை ஏற்க யாரும் முன்வராத நிலையில் அப்பதவியை நானே ஏற்கிறேன் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை நிதியமைச்சர் பதவியை ஏற்க யாரும் முன்வராத நிலையில் அப்பதவியை நானே ஏற்கிறேன் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்திவாசிய பொருட்களின் விலை உயர்வால் இலங்கை மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அரசின் தவறான பொருளாதார நிர்வாகம் எனக்கூறி பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே விலக வேண்டும் எனக்கூறி இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்தது. அரசியல் அழுத்தம் காரணமாக திங்கட்கிழமை பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே விலகினார்.
இதனை தொடர்ந்து ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 400 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் போராட்டகாரர்கள் மஹிந்த ராஜபக்சேவின் அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்தனர். இதனால் உயிருக்கு அஞ்சி மஹிந்த ராஜபக்சே தனது குடும்பத்துடன் தமிழர்கள் அதிகம் வாழும் திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்தார். இதனிடையே இலங்கையில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தீவிரம் காட்டினார். புதிய அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளை அழைத்து பேசினார். அந்த வகையில் தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமர் பதவியை ஏற்க அழைப்பு விடுத்தும் பல்வேறு நிபந்தனைகளை கூறி அவர் பிரதமர் பதவியை தவிர்த்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அனைத்து கட்சி ஆதரவுடன் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக அதிபர் கோத்தபய ராஜபக்சே தேர்வு செய்தார். அதனைதொடர்ந்து இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு நாட்டின் நிதித்துறை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன் படி நாட்டின் நிதியமைச்சராக ஒருவரை நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. அதனால் முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பதவியை ஏற்க முன்வரவில்லை. அதனால் கூடுதலாக நிதியமைச்சர் பொறுப்பை ரணில் விக்ரமசிங்கே ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் நிதியமைச்சராக அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.