இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்...

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்...

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்கு அரசின் தவறான நிர்வாகத்திறனே காரணம் எனக்கூறி மக்கள் அதிபர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இலங்கையின் பிரதமர் பதவி விலக வேண்டும் எனக்கூறி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தின் போது ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களுக்கும், போராட்டகாரர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக அதிக அழுத்தம் எழுந்த நிலையில் அவர் திங்களன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 

அதன் பின், போராட்டகாரர்கள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வீடுகள், அலுவலகம் மற்றும் ஆளுங்கட்சியினர் வீடுகளை தீ வைத்து கொளுத்தினர். இதனால் உயிருக்கு பயந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் உடல்நிலை சரியில்லை எனக்கூறி அவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பி செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் மகிந்த ராஜபக்சே அவரது குடும்பத்தினருடன் தஞ்சம் புகுந்தார். இந்த நிலையில் இலங்கையில் புதிய பிரதமரை நியமிக்கும் பணியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தீவிரமாக ஈடுபட்டுவந்தார். புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களை அழைத்து அவர் பேசி வருகிறார். 

அந்த வகையில் பிரதமர் பதவியை ஏற்க வருமாறு தற்போதைய எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவை பல்வேறு முறை அழைத்தும், அவர் பல்வேறு நிபந்தனைகளை கூறி அதை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனைத்துக்கட்சி ஆதரவுடன் இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கேவை புதிய பிரதமராக நியமனம் செய்ய அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனைதொடர்ந்து இலங்கையின் 26 வது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றார். 

இலங்கையில் தற்போது பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தனது 28 வயதிலே வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்பு 1980ஆம் ஆண்டு கல்விதுறை அமைச்சர் பதவி அவருக்கு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து 9 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்த ரணில் கல்வித்துறையில் நவீன யுகத்திற்கேற்ப பல மறுசீரமைப்புகளை கொண்டுவந்தார். அதனைதொடர்ந்து 1993 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமராக ரணில் முதல்முறையாக பதவியேற்றார். தொடர்ந்து 40 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சாதனை படைத்தவராக இருந்தாலும் பிரதமர் பதவியை முழுமையாக பூர்த்தி செய்யும் பாக்கியம் இவருக்கு எட்டா கனியாக இருந்துள்ளது. எனினும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே 6 வது முறையாக ரணில் இன்று பிரதமராக பதவியேற்றுள்ளார். மேலும், பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கேவிற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவரை தொடர்ந்து 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நாளை காலை பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்