கர்நாடக மாநிலம், கோலாரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இருந்து ரூ.4 கோடியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆட்சியை தக்க வைக்க ஆளும் பா.ஜ.க-வும், ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் வீட்டில் உள்ள மரத்தில் இருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். இந்தச் சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீஸார் பங்கார்பேட் தாலுகாவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் சோதனை செய்தனர்.
இதில் ரூ.4 கோடிக்கு அதிகமாகப் பணத்தைப் போலீஸார் விடுதியில் இருந்தும் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்தும் கைப்பற்றினர்.
இந்தச் சொகுசு விடுதியை கடந்த 2 ஆண்டுகளாக ராமேஷ் யாதவ் என்பவர் வாடகைக்கு எடுத்து நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு தெரிந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்துப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அந்தப் பகுதியில் நடக்க இருந்த தேர்தல் பிரசாரத்தை தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ரத்து செய்துள்ளார்.
கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அடுத்தடுத்து கோடிகளில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்படுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.