உத்தரபிரதேசத்தில் இரண்டு பேருக்கு கப்பா வைரஸ் தொற்று
ஆல்ஃபா, டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் இரண்டு பேருக்கு கப்பா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்றவர்கள் இருவரின் ரத்த மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தும்போது தான் கப்பா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 107 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் மாறுபாடு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா நிலவரம் குறித்து இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநிலத்தின் கூடுதல் சுகாதாரச் செயலர் அமித் மோகன் கூறுகையில், டெல்டா, கப்பா, ஆல்ஃபா ஆகிய மூன்று திரிபுகளுமே உத்தரபிரதேசத்தில் இருக்கின்றன.
இவை அனைத்துமே தற்போது வழங்கப்படும் சிகிச்சை முறைகளுக்கே கட்டுப்படக் கூடியவை தான் என்றும், தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் தினசரி நேர்மறை விகிதம் 0.04 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது எனவும் அவர் கூறினார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உள்பட 14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.