பாஸ்கெட் பால் வீடியோ வைரலான நிலையில் தற்போது டான்ஸ் ஆடும் வீடியோ வெளியானது.
மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாக்கூர். அவ்வப்போது அவர் கூறும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் எம்பி ஆவதற்கு முன்பே, மும்பையில் மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி 4,000 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது மகாராஷ்டிர போலீஸ். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், வழக்கின் விசாரணை என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது, தனக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாகவும், தன்னால் எழுந்து நடக்க முடியாது என்பதால் ஆஜராவதிலிருந்து விலக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலக்கு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொதுவெளியில் கூட வீல் சேருடன் தான் வலம் வருவார் பிரக்யா சிங் தாக்கூர். எழுந்து நடக்க முடியாது என கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் கூடைப்பந்து வீரர்களுடன் இணைந்து விளையாடுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
எழுந்து நடக்க முடியாத ஒருவரால் எப்படி பாஸ்கெட் பால் விளையாட முடியும் என நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்தச் சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எளிமையான முறையில் நடந்த திருமண விழாவில் அவர் நடனம் ஆடிய வீடியோ தான் அது.