பழங்குடியின மக்களுக்காக போராடிய ஸ்டேன் சுவாமி காலமானார்: சமூக ஆர்வலர்கள் இரங்கல்..!
பழங்குடியின மக்களுக்காக போராடிய ஒரே தமிழரான ஸ்டேன் சுவாமி மும்பையில் உள்ள சிறையில் இன்று காலமானார்.
கத்தோலிக்க பாதிரியாராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படுபவர் ஸ்டேன் சுவாமி. கடந்த 50 ஆண்டுகளாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்நின்று நடத்திய ஒரே தமிழர் இவர். ஆனால், இவருக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி தேசிய புலனாய்வு முகமை அவரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது. மேலும் ஸ்டேன் ஸ்வாமி ஒரு மாவோயிஸ்டு எனவும் அவர் நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று வரையிலும் தனக்கு ஜாமீன் வழங்க கேட்டுப் போராடி வந்தார். ஆனால் அவருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் தேசிய புலனாய்வு முகமை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக வெளியான இவரது மரண தகவலை அறிந்த இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.