பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இதனை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. புல்வாமா தாக்குதலை போல் மேலும் ஒரு தாக்குதலை நடத்த ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்தார். வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதிக்குள், புல்வாமா தாக்குதல் பாணியில் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ராவேஷ் குமார், பாகிஸ்தானின் கருத்து அபத்தமானது என்றும், பொறுப்பற்றது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தவிருப்பதாக வெளியான தகவலையும் இந்தியா மறுத்துள்ளது.