மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் நேற்று பழைய கட்டிடத்தில் தொடங்கிய நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதிய கட்டிடத்தில் இன்று முதல்முறையாக கூட்டம் தொடங்கியது.
முன்னதாக பழைய கட்டிடத்தில் இன்று காலை எம்.பி.க்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு, நாடாளுமன்ற அனுபங்களை பகிர்ந்துக்கொண்டனர்.
பின்னர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பிரதமர் மோடி தலைமையில் எம்.பி.க்கள் பேரணியாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சென்றனர். தொடர்ந்து, மக்களவை கூட்டம் பகல் 1.15 மணி அளவில் தேசிய கீதத்துடன் தொடங்கியது. பிரதமர் மோடி எம்.பிக்களை வரவேற்று பேசினார்.
சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா இன்றைய சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக மகளிர் இட ஒடக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களவையில் மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது.இந்த மசோதாவிற்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.