கர்நாடக மாநிலம் மைசூர் அருகே டி.நரசிபுரா கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளர் ஆனந்த்.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே டி.நரசிபுரா கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளர் ஆனந்த். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதில், மகனுக்கு நரம்பு சம்பந்தமான நோயால் பாதிப்பு உள்ளது. இதனால் இரு மாதங்களுக்கு ஒருமுறை பெங்களூருவில் உள்ள நிம்ஹன்ஸ் மருத்துவமனைக்கு மகனை அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். அதே சமயம் மாத்திரையும் ஒரு வேளை கூட தவறக்கூடாது. இந்த சூழலில் திடீரென போடப்பட்ட முழு முடக்கத்தால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் பெங்களூரு செல்ல முடியாமல் தவித்த ஆனந்த் இறுதியாக சைக்கிளில் செல்ல முடிவெடுத்தார்.
வழியில் காவல்துறையினர் பிடிக்கலாம் என பயந்து பொதுமக்கள் அதிகம் பயணிக்காத சாலையில் இரண்டு நாட்கள் பயணித்து பெங்களூர் மருத்துவமனைக்கு சென்று மாத்திரைகளை வாங்கினார். மகனுக்காக ஆனந்த் சைக்கிளில் நெடுந்தூரம் பயணித்து வந்ததை அறிந்த டாக்டர்கள் மாத்திரையுடன், வழி செலவிற்கு ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளனர். அதை எடுத்துக்கொண்டு அடுத்த இரு நாட்களில் பயணித்து வீடு வந்து சேர்ந்தார். மகனின் சிகிச்சை தவறி விடக்கூடாது என்பதற்காக சைக்கிளில் 300கி.மீ பயணித்து மாத்திரைகளை வாங்கி வந்த தந்தையின் இந்த செயல் பலரது கண்களில் ஈரத்தை வர வைத்துள்ளது.