திருமண அழைப்பிதழ்கள் இருந்தால் மட்டுமே ஜவுளி மற்றும் நகைக் கடைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்
கேரளாவில் திருமண அழைப்பிதழ்கள் இருந்தால் மட்டுமே ஜவுளி மற்றும் நகைக் கடைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் கேரளாவில் படிப்படியாக குறைந்து வருகிறது. புதிதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 12 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், கேரளாவில் இன்று காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் பொது இடங்களில் நடை பயிற்சி மேற்கொள்ளலாம் என்றார்.
அதேநேரத்தில் சமூக இடைவெளியுடன் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் ஜவுளி, நகை மற்றும் செருப்பு கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் திறக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்,
நகை மற்றும் ஜவுளி கடைகளுக்குள் திருமண அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ளலாம். ஊரடங்கு தளர்வுகளை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய மாநில அலுவலகங்களில் ஜூன் 7ஆம் தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் எனவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.