கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.நாடு முழுவதும் பெரிய அளவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எற்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.நாடு முழுவதும் பெரிய அளவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எற்பட்டுள்ளது.
தொற்று மிக அதிகமாக இருக்கும் சில மாநிலங்களில், ஆக்சிஜனுக்கான தட்டுப்பாடும் மிக அதிகமாக உள்ளது. தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உட்பட போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் அசாதாரண சூழல் உருவாகி வருகிறது.மருத்து வசதிகளின் தட்டிப்பாடு காரணமாக டெல்லியில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ வசதிகளின் குறைபாடு குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தது.
"நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது அரசின் அடிப்படைக் கடமையாகும். அதனை மத்திய அரசு சரியாக செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள், பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்யுங்கள்" என்று டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது.
முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையை ஒரு நாள் ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அதற்கு உயர் நீதிமன்றம், ஆக்சிஜன் கிடைக்காமல் இன்று இரவு யாரேனும் இறந்தால், அதற்கு நீங்கள் பொறுப்பேர்பீர்களா என கோவமாக கேள்வி எழுப்பியது. மேலும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனை ஏன் மருத்துவமனைகளில் பயன்படுத்தத் தொடங்கவில்லை என்றும் கேட்டது.
தொழிற்சாலைகளிலிருந்து ஆக்சிஜன் பெறுவது குறித்த சிரமங்களை மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர்கள் விவரித்தனர். மேலும் கோவமடைந்த உயர் நீதிமன்ற நீதிபதி, 'மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் தொழிற்சாலைகள் குறித்து கவலைப்படுகிறீர்கள். டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் இருக்கக்கூடிய சூழல் மிகவும் அபாயகரமானது. இந்த நிலைமை டெல்லியில் மட்டுமல்ல. நாடு முழுவதும் நிலைமை மோசமாகத்தான் உள்ளது. இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு. இதற்காக தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன்களை உடனடியாக மருத்துவ சேவைகளுக்கு திருப்பி விடுங்கள்" என்று அறிவுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.