தேனிலவை வித்தியாசமாக கொண்டாடிய தம்பதி!
பொதுவாக தேனிலவு கொண்டாட மலை பிரேதேசங்கள், வெளிநாடுகளுக்கு செல்வது தான் புதுமண தம்பதிகள் விரும்புவார்கள். ஆனால், கர்நாடகவைச் சேர்ந்த ஒரு தம்பதி அங்குள்ள கடற்கரை ஒன்றுக்கு சென்று, கடற்கரையில் தேங்கி இருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றிய செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகேயுள்ள பைண்டூரை சேர்ந்த அனுதீப் ஹெக்டேவும் மினுஷா காஞ்சனும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் பெரும்பாலும் சந்தித்துக்கொள்வது மங்களூர் சோமேஷ்வரா கடற்கரையில்தான். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த நவம்பர் 18-ந்தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்கு பின்னர் தேனிலவுக்கு செல்லும் முன் தங்கள் காதல் வளர உதவிய சோமேஷ்வரா கடற்கரைக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தனர். இதையடுத்து, இருவரும் அந்த கடற்கரையை சுத்தம் செய்ய திட்டமிட்டனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மாற்றம் கொண்டு வர முடியுமா? என்றால் முடியும் என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் சோமேஸ்வரா கடற்கரையில் தேங்கி இருந்த பிளாட்டிக் பாட்டில்கள், செருப்புகள், உணவு குப்பைகள், காகிதக் குப்பைகள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர். மேலும், தேனிலவை கொண்டாடும் முன், அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பியதாக இந்த இளம் தம்பதியினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து அனுதிப் கூறுகையில்,” நான் பிறந்து வளர்ந்த இடம் இவ்வளவு மோசமான நிலையில் இருப்பது வருத்தம் அளித்தது. தேனிலவுக்கு சர்வதேச சுற்றுலா செல்ல முடிவு செய்திருந்தோம். ஆனால், கோவிட் காரணத்தால் அதை தவிர்த்துவிட்டோம். திருமணம் முடிந்த மறுநாளே, சோமேஷ்வரா கடற்கரையை சுத்தம் செய்ய முடிவு செய்தோம்” என்று கூறினார்.
மேலும், இதற்கு முன்பே அனுதிப் இப்படியான சுத்தம் செய்யும் பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வுகளில் ஈடுபட்டுள்ளார். தனது மனைவியிடம் ஒப்புதல் கேட்ட போது, அவர் உடனே ஒப்புக் கொண்டார் என கூறுகிறார் அனுதிப்.
நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை இவர்கள் ஏறத்தாழ 70% குப்பைகளை அகற்றியுள்ளனர். அவற்றுள் 90% குப்பைகள் பாட்டில்கள், செருப்புகள் மற்றும் கவர்களாக இருந்துள்ளன.
ஆரம்பத்தில் குடும்பத்தினர் வேடிக்கையாக பார்த்ததாகவும், புதுமண பெண்ணை குப்பை அள்ள வைப்பதை கண்டு அனுதிப்பின் அப்பா வருத்தப்பட்டார் என்றும், பின்னர் தங்களது எண்ணம் அவர்களுக்கு புரிந்துக் கொண்டனர் என்றும் அனுதிப் கூறினார்..