கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
மொத்தம் 2615 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் விஜயநகர் மாவட்டம், மசபின்னலா கிராமத்தில் வாக்குகள் பதிவான இயந்திரங்களை அதிகாரிகள் ரகசியமாக வேறு அறைக்கு மாற்றுவதாக, அந்த பகுதியில் திடீரென தகவல் பரவியதால் பொதுமக்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் தேர்தல் அதிகாரிகளின் கார் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பொதுமக்களில் சிலர் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.