மத்தியப் பிரதேசம் மாநிலம், கார்கோன் மாவட்டத்தில் தங்கார்கோன் ஆற்றுப் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மீது, இன்று தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. பாலத்தின் மத்தியில் பேருந்து வந்தபோது திடீரென நிலைதடுமாறி தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது.
சுமார் 50 அடி உயரத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்ததில், பேருந்தில் பயணம் செய்தவர்களில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியபடி அலறினர்.
தகவலறிந்ததும் காவல் துறையினர் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காகவும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கார்கோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரம்வீர் சிங் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ‘இந்த விபத்தில் 22 பேர் பேர் உயிரிழந்துவிட்டனர். 25 பேர் காயம் அடைந்து உள்ளனர்’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என மத்தியப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.