ரூ.51 கோடி கடன் பாக்கி இருப்பதாக அரியானா டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி தந்த வங்கி!
ரூ.50,000 கடன் கேட்டு வங்கியை அணுகிய டீக்கடைக்காரருக்கு ஏற்கனவே நீங்கள் ரூ.51 கோடி கடன் பாக்கி வைத்துள்ளீர்கள் என வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அரியானாவில் அரங்கேறியுள்ளது.
குருக்க்ஷேத்ராவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தனது டீக்கடையை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மீண்டும் டீக்கடையை திறக்க ரூ.50 ஆயிரம் கடன் கேட்டு வங்கி ஒன்றுக்கு மனு செய்திருந்தார்.
அவரது பெயர் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்த வங்கி அதிகாரிகள், நீங்கள் ஏற்கனவே வங்கியில் ரூ.51 கோடி கடன் வாங்கியுள்ளீர்கள். உங்களுக்கு அது தெரியாதா? இப்போது மேலும் கடன் கேட்டால் எப்படி தரமுடியும்? முதலில் ரூ.51 கோடி கடன் பாக்கியை கட்டுங்கள் எனக் கூறி ராஜ்குமாருக்கு அதிர்ச்சி தந்துள்ளது.
நோட்டீஸை பார்த்து ராஜ்குமார் அதிர்ச்சி அடைந்தார். "சாதாரண டீக்கடை வைத்துள்ள நான் இதுவரை எந்த வங்கியிலும் கடன் வாங்கியது கிடையாது. எப்போது ரூ.51 கோடி நான் வங்கி கடன் வாங்கினேன் என எனக்கே தெரியவில்லை" என்றார்.