10 ரூபாய் டாக்டர் மோகன் ரெட்டி திடீரென மரணம் அடைந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஏழை மக்களுக்கு பல ஆண்டுகளாக வெறும் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த 10 ரூபாய் டாக்டர் மோகன் ரெட்டி திடீரென மரணம் அடைந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உயிரை காப்பாற்றும் மருத்துவர்களை எப்போது மக்கள் கடவுளாகவே பார்க்கின்றனர். அதிலும் மருத்துவத்தை வியாபாரமாக பார்க்காமல், ஏழை மக்களுக்காக சேவை செய்யும் நபர்கள் ஒரு சிலர் இருந்தாலும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாசமும் அன்பும் கிடைக்கும்.
அந்த வகையில், சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகன் ரெட்டி என்ற மருத்துவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. காரணம் இவர் மருத்துவத்தை வியாபாரமாக பார்க்காமல் மக்களிடம் இருந்து வெறும் 10 ரூபாய் மட்டுமே பெற்றுவந்துள்ளார்.
கடந்த 1936ஆம் ஆண்டு நெல்லூரில் பிறந்த மருத்துவர் மோகன் ரெட்டி, பின்னர் தனது ஆரம்ப கல்வியை குடூரில் பயின்றார். தொடர்ந்து கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பிறகு மருத்துவரான அவர், ரயில்வேயில் பணியாற்றினார்.
பின்னர் வில்லிவாக்கத்தில் மோகன் நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனையை தொடங்கினார். அதில், இவர் ஏழை மக்களுக்கு மருத்துவம் செய்து வந்தார். அத்துடன் அப்பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு அளிப்பது போன்ற சேவைகளும் செய்து வந்துள்ளார். இவரை அப்பகுதி மக்கள் 10 ரூபாய் டாக்டர் என்று அழைப்பார்கள். மேலும் இவரது சேவையை பாராட்டி அப்போதைய தமிழக ஆளுநர் ரோசய்யா பாராட்டினார்.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி 10 ரூபாய் டாக்டருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று பின்னர் அதில் இருந்து மீண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். இந்த தகவலை அவரது சகோதரரும் மருத்துவருமான எம்.கே.ரெட்டி தெரிவித்துள்ளார்.
அவரின் மறைவு வில்லிவாக்கம் பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.