முதியவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால், 48 மணிநேரம் அவரது உடலை ஐஸ்கிரீம் ப்ரீசரில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிலே முதியவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யாமல் இறப்பு சான்றிதழ் தர முடியாது என மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால், மயானத்தில் அடக்கம் செய்வதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்த குடும்பத்தினர் சுகாதாரத்துறை, குடிமை அதிகாரிகள், காவல்துறை, அரசியல்வாதிகள் என அனைவரின் உதவியையும் நாடியுள்ளனர். எனினும், யாரும் உதவி செய்ய முன்வரவில்லை
இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாயன்று காலையில் உடல் அழுகிவிடாமல் இருக்க ஐஸ்கிரீம் ப்ரீசர் ஒன்றை வாங்கி அதில், உடலை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, அன்று மாலை உயிரிழந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.
இதையடுத்து, அந்த முதியவர் உயிரிழந்து 48 மணி நேரத்திற்கு பின்னர், கடந்த புதன்கிழமை பிற்பகல் 2 மணி அளவில், குடிமை அதிகாரிகள் அந்த உடலை அகற்றிச்சென்றுள்ளனர்.
அவர் உயிரிழந்த 50 மணி நேரத்திற்கு பின்னர் அந்த கட்டிடம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.