மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிமோனியா பாதித்த சலூன் கடை உரிமையாளருக்கு கொரோனா பரிசோதனை வர தாமதமானதால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் 45 வயதான சலூன் கடை உரிமையாளர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரிசோதனை என்பதால் அவரை அவரது உறவினர்கள் அணுக முடியாத நிலையில் அவர் சரியான முறையில் மருந்துகளை உட்கொள்ளவில்லை என தெரிகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாயன்று இரவு அவர் உயிரிழந்தார். ஆனால் கொரோனா பரிசோதனை முடிவுகள் அவர் இறந்து 10 மணி நேரம் கழித்தே வந்துள்ளது. அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சவிதா சமாஜின் தலைவர் பி.நாராயணசாமி கூறுகையில், "96 மணி நேரமாக தனக்குள்ள நிமோனியா பாதிப்பை அவர் யாரிடமும் சொல்லாமல் ஒரு படுக்கையில் படுத்துக்கொண்டார், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்படாததால் எந்த சிகிச்சையும் அவருக்கு அளிக்கவில்லை" என குற்றம் சாட்டியுள்ளார்.
இதை மறுத்துள்ள பொது மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பி.ஆர் வெங்கடேஷயா, "நாங்கள் அவருடைய தேவைகளுக்கு முழு கவனம் செலுத்தினோம். எந்த வித கவன குறைபாடும் இதில் ஏற்படவில்லை. சனிக்கிழமையன்று நோயாளியிடமிருந்து ஒரு துணியால் துடைக்கப்பட்ட மாதிரி சேகரிக்கப்பட்டது. ஜி.கே.வி.கே.யில் உள்ள சோதனை ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டன, இது நிம்ஹான்ஸ் மற்றும் பி.எம்.சி.ஆர்.ஐ.யில் உள்ள ஆய்வகங்கள் மூடப்பட்டிருந்ததால் அதிகமான பரிசோதனைகளை அந்த ஆய்வகம் கையாண்டது" என தெரிவித்துள்ளார்.
பல மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை இல்லாததால் கடந்த புதன்கிழமை மட்டும் அங்கு 3 நேர்மறை கொரோனா நோயாளிகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.