சமூகவலைதள பக்கங்களை நிர்வகிக்க பெண்களுக்கு வாய்ப்பு... மோடி அதிரடி அறிவிப்பு
தமது சமூக வலைதள பக்கங்களை வரும் மார்ச் 8-ம் தேதி முதல் பெண்கள் நிர்வகிக்க உள்ளனர் என்றும், அதற்காக பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்து சமூக வலைதள பக்கங்களில் இருந்தும் விலகுவது குறித்து யோசித்து வருவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவை பார்த்த அவரைப் பின்தொடரும் கோடிக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களின் பக்கங்களில் இருந்து வெளியேற வேண்டாம் என பிரதமர் மோடியை பின்தொடர்வோர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதை வலியுறுத்தி மோடியை பின்தொடரும் கோடிக்கணக்கானோர் பதிவிட்ட ‘நோ சார்’ என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி மீண்டும் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், வரும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் முதல் தனது பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய சமூக வலைதள பக்கங்களை பெண்கள் நிர்வகிக்க உள்ளனர். வாழ்க்கையிலும், மேற்கொள்ளும் பணியிலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் பெண்களிடம் சமூக வலைதள பக்கங்களை ஒப்படைக்கத் தயார்.
சாதனைப் பெண்கள் தங்களது விவரங்களை எழுத்து மூலமாகவோ, வீடியோ பதிவு மூலமாகவோ #ShelnspiresUs என்ற ஹேஷ்டேக்கில் டுவிட்டரில் பதிவிட வேண்டும். இதன் பிறகு தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு பிரதமரின் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவிடும் வாய்ப்புகள் வழங்கப்படும். இது பல பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.