நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்... ஒரு முறை கூட வராத 95 எம்.பி-க்கள்…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 95 பேர், 2020-21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒரே ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், 1993-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் சமீபகாலமாக, நிலைக்குழு கூட்டம் திருப்தியாக நடப்பது இல்லை. நிலைக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பான பணிகள் குறித்து விவாதிக்க பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், "மொத்தம் உள்ள 244 பேரில் 39 சதவிகித உறுப்பினர்கள் கூட, அதாவது 95 உறுப்பினர்கள் கூட மானியங்களுக்கான கோரிக்கைகள் குறித்த எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. 78 ராஜ்யசபா எம்.பி-க்களில் 29 சதவிகிதத்தினர் பங்கேற்கவில்லை. இதேபோல், 188 லோக்சபா உறுப்பினர்களில் 47 சதவிகிதத்தினர் பங்கேற்கவில்லை" என்றார்.