எதிாிகளின் இலக்குகளை தாக்குவது மட்டும்தான் எங்களது வேலை. எத்தனை உயிர் இழப்புகள் ஏற்பட்டது என்பதை அரசுதான் கணக்கெடுக்கும் என இந்திய விமான படை தளபதி கூறினார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தற்கொலை படை தாக்குதல் நடத்தியது. இதில் 40 வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்திய விமான படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து ஜெய்ஷ் இ முகமதுவின் தீவிரவாத முகாம்களை குண்டு வீசி தாக்கி அழித்தது.
இந்திய விமான படையின் அந்த தாக்குதலில் சுமார் 350 தீவிரவாதிகள் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் விமான படையின் தாக்குதல் குறித்து கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய விமான படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பாலகோட் தீவிரவாத முகாம் மீது நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் இறந்தாங்கனு நாங்க கணக்கு எடுக்கமாட்டோம். நாங்கள் தாக்குதலை திட்டமிடுவோம். பின் இலக்குகள் தாக்கப்பட்டதா அல்லது இல்லையா என்பதைதான் கணக்கில் கொள்வோம்.
அந்த இடத்தில் எத்தனை பேர் இருந்தார்களோ அதனை பொறுத்து உயிர் இழப்புகள் இருக்கும். அரசுதான் அதனை கணக்கெடுத்து சொல்லும். இவ்வாறு அவர் கூறினார்.