டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் பண்டிகை காலம் என்பதால் டெல்லிக்கு விடுமுறை என்று அமெரிக்க சுற்றுலா பயணியை ஏமாற்றியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் வான்மீட்டர் இந்தியாவிற்கு சுற்றி பார்க்க வந்துள்ளார். அப்போது டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் பண்டிகை காலம் என்பதால் டெல்லிக்கு விடுமுறை என்று நம்ப வைத்து ரூ. 90, 000 வரையில் ஏமாற்றியுள்ளார்.
கடந்த அக்டோபர் 18ம் தேதி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு ஜார்ஜ் வான் மீட்டர் என்ற அமெரிக்க சுற்றுலா பயணி வந்துள்ளார். இவர் ஏற்கெனவே பஹர்கஞ்ச் ஏரியாவில் புக் செய்த ஒட்டலுக்கு செல்ல ராம் ப்ரீத் என்பவரின் டாக்ஸியில் ஏறியுள்ளார். டாக்ஸி கொனாட் பிளேஸின் அருகில் உள்ள சாலையில் சென்ற போது போலீஸ் தடுப்பு நிறுத்தப்பட்டது.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய டாக்ஸி ஓட்டுநர், பண்டிகை காலம் என்பதால் டெல்லி முழுவதும் ப்ளாக் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே ஜார்ஜ் புக் செய்திருக்கும் ஓட்டலுக்கு செல்ல முடியாது என்றும் நம்ப வைத்துள்ளார்.
அதன்பிறகு அந்த சுற்றுலா பயணியை இன்னொரு சுற்றுலா ஏஜெண்ட்டிடம் அறிமுகப்படுத்திய ராம் ப்ரீத், ஆக்ராவில் உள்ள ஒரு உயர்தர ஓட்டல் புக் செய்து கொடுத்துள்ளார்.
அந்த ஓட்டலுக்கு சென்ற பிறகு, ஏற்கெனவே புக் செய்திருந்த பழைய ஓட்டலுக்கு போன் செய்து ரீபண்ட் கேட்ட போது தான், டாக்ஸி ஓட்டுநராலும், சுற்றுலா ஏஜண்டாலும் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்தார்.
அதனை தொடர்ந்து ஜார்ஜ் வான் மீட்டர் டெல்லி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ராம் ப்ரீத்தை போலீஸார் கைது செய்தனர்.