நாட்டில் மக்கள் தொகை அதிகரிக்க காதல் திருமணங்கள் உதவியாக இருக்கும் என அரசு திட்டமிட்டுள்ளது
மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் காதல் செய்ய ஒரு வாரம் விடுமுறை அளித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகத்திலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு சீனா. ஆனால், தற்போது முன்பு எப்போதும் இல்லாத வகையில், தற்போது அந்த நாட்டில் மக்கள் தொகை மிகவும் சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், வேலைக்கு ஆள் கிடைப்பதில் சிக்கல், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளைச் சீன அரசு சந்தித்து வருகிறது.
இந்த சிக்கல்களுக்கு எல்லாம் முடிவு கட்டும் வகையில், மக்கள் தொகையை அதிகப்படுத்த சீன அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது. அந்த வகையில், 'மக்கள் தொகையை எப்படி அதிகப்படுத்தலாம்?' என மூத்த அதிகாரிகளுடன் அரசு ஆலோசனை நடத்தியது.
அதில், அதிக அளவு இளைஞர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும், அப்போதுதான் மக்கள் தொகை விரைவில் அதிகரிக்கும் என திட்டமிடப்பட்டது.
அந்த வகையில், புதிய திட்டத்தின்படி கல்லூரி மாணவ, மாணவிகள் காதல் செய்ய ஒரு வாரம் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சீனாவில் உள்ள 9 கல்வி நிலையங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் முதல் வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து 7ம் தேதி வரை காதல் செய்ய, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தினம் அன்று மாணவ, மாணவிகள் பசுமை நிறைந்த பூங்கா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தங்களது காதலை வெளிப்படுத்தவேண்டும் என்றும், காதல் நிகழ்வுகளை டைரியில் எழுதவும், பீறிட்டு எழும் காதல் காட்சிகளை மறக்காமல் வீடியோ காட்சி பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- கே.என்.வடிவேல்