கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி
சென்னை மெரினா காமராஜர் சாலையில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் 2.21 ஏக்கரில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது, கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.
"கலைஞரின் வசனத்தில் அனல் பறக்கும், பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது, கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம். 50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி, பல்வேறு சிறப்பு மிக்க சட்டங்களை கொண்டு வந்தவர். என் தந்தை கலைஞர் கருணாநிதியின் தீவிர பக்தர்" என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.