தமிழ்நாடு: கொரோனா பரவல்; மூலக்கூறு ஆய்வு முடிவுகள் - பொது சுகாதாரத் துறை இயக்குநர் பேட்டி #Exclusive

தமிழ்நாடு: கொரோனா பரவல்; மூலக்கூறு ஆய்வு முடிவுகள் -  பொது சுகாதாரத் துறை இயக்குநர் பேட்டி #Exclusive
கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின்போது உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசிகள் பரவலாக செலுத்தப்பட்ட பின்னரே, ஓரளவு இயல்பு நிலை திரும்பியது. 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகக் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பால் கர்நாடகாவில் 2 பேரும் மகாராஷ்டிராவில் 2 பேரும் உத்தரகண்ட்டில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அதோடு தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பரவலைத் தடுக்க, மாநில அரசு மாவட்ட வாரியாக தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகத்திடம் குமுதம் இணையதளத்துக்காக பேசினோம்.

''கொரோனா பரவத் தொடங்கிய காலம் முதல் இதுவரை 2 வருடங்களுக்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை என கொரோனா தொடர்பான அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை தினமும் வெளியிடப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என்று சொல்வதைவிட, பிற மாநிலங்களை காட்டிலும் தொற்று விஷயத்தில் கடுமையான கண்காணிப்பு இருக்கிறது என்று சொல்வதே சரி. இவ்வாறு நுட்பமாக கண்காணிக்கப்பட்டு வருவதால்தான் புதிய வைரஸ் திரிபுகள் வருவது எளிதில் தெரிகிறது. இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. அவ்வப்போது வைரஸ் தொற்று சிறிது அதிகரிப்பதும் மற்றும் குறைவதும் இயல்புதான்'' என்கிறார். 

தொடர்ந்து கொரோனா திரிபுகள் குறித்துப் பேசிய மருத்துவர் செல்வவிநாயகம், '' இந்திய அளவில் கொரோனா பாதிப்பு காரணமாக நடத்தப்பட்ட மூலக்கூறு ஆய்வில், கடந்த 4 மாதங்களில் இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓமிக்ரான் துணை வகை வைரஸ்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றியும் அச்சப்பட தேவையில்லை. டெல்டா, ஆல்பா வகை போன்று ஒமிக்ரானும் பாதிக்கப்பட்ட  90 சதவீதம் பேருக்கு இருக்கும் இதைப் பற்றி மூலக்கூறு ஆய்வை மேற்கொள்ளும் வசதி தமிழ்நாட்டில் உள்ளது. இதன்மூலம், கொரோனா திரிபுகளால் நமக்கு பாதிப்பு ஏற்படுமா, எந்தளவுக்கு பாதிப்பு, பரவும் தன்மை போன்றவற்றை நம்மால் அறிய முடியும்.  

தற்போது புதிய வைரஸாக கருதப்படும் XBB.1.16 திரிபை பொறுத்தவரையில், இது ஆறு மாதங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டுவிட்டது. இது ஏற்கனவே ஆய்வில் இருப்பதுதான்.  தமிழ்நாட்டில் வைரஸ்களைப் பற்றி கண்டறிவதற்கான வசதிகள் இருப்பதால் நாம் எளிதில் அவற்றை வகைப்படுத்தி கண்டறிந்து வருகிறோம். நாட்டின் பல மாநிலங்களில் மூலக்கூறு ஆய்வு செய்வதற்கான வசதிகள் இல்லை. 

கொரோனா பரவலில் நாம் பார்க்க வேண்டியது, இதனால் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்களா என்பது தான். மற்றபடி இருமல், சளி ஆகிய பிரச்னைகள் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு வருவதில்லை'' என்கிறார்.

'' கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை சேகரித்து தொடர்ந்து மூலக்கூறு ஆய்வு செய்கிறோம். காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு கொரோனா பாசிட்டிவா, நெகட்டிவா என கண்டறியும் சோதனை ஒரு புறம்‌ இருக்க, வைரஸ்களின் வீரியம் பற்றி கண்டறியும்‌ ஆய்வு மறுபக்கம் நடைபெற்று வருகிறது.  இந்த மூலக்கூறு ஆய்வுக்கான மாதிரிகள் குறிப்பிட்ட  சிலரிடமே சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வைரஸின் மரபணு ஆய்வு செய்யப்பட்டு அதன் பரிணாம வளர்ச்சி, பாதிப்பு மற்றும் பரவும் தன்மை உள்ளிட்டவை கண்டறியப்படுகின்றன. 

அந்த வகையில் இதுவரை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ள இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளே போதுமானது. அதற்காக தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்படாது என்று அர்த்தமல்ல. மாறாக, தொற்று ஏற்பட்டாலும் ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாது'' என்கிறார் மருத்துவர் செல்வவிநாயகம். 

கோவை உள்பட சில மாவட்டங்களில் மட்டும் கொரோனா பரவல் அதிகரிப்பது குறித்துப் பேசிய அவர், '' அந்தந்த மாவட்டங்களின் மக்கள் தொகையை பொறுத்துதான் பரவல் அதிகரிக்கிறதே தவிர, வேறு எந்தக் காரணங்களும் இல்லை. இதில் நாம் பார்க்கவேண்டியது குறிப்பிட்ட மக்கள் தொகையில் எத்தனை பேருக்குப் பரவுகிறது என்பதுதான்.

காய்ச்சல், கொரோனாவை பொறுத்தவரையில் அரசு ஏற்கனவே வலியுறுத்தி வருவதுபோல அறிகுறிகள் இருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட நெறிமுறைகளைப் பின்பற்றினாலே போதுமானது'' என்கிறார்.

- ஜெஸ்பெல் எஸ்லின்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்