இயற்கையாக முறையில் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் தயாரிப்பது எப்படி ?

இயற்கையாக முறையில் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் தயாரிப்பது எப்படி ?

இயற்கையிலேயே சிறப்பான கூந்தலைப் பெற்ற பெண்கள், தங்கள் கேசத்தைத் தூய்மையுடனும் வாசனையுடனும் பராமரிப்பது அவசியம். ஆனால், கெமிக்கல் கலந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்தி, தங்கள் தலைமுடியை சிலர் பாழாக்கிக் கொள்கிறார்கள்.

டி.வி. மற்றும் இணையதளங்களில் வரக்கூடிய கவர்ச்சிகரமான விளம்பரங்களில் மயங்கி, உடனே அவற்றை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாகவே விளம்பரங்கள் மற்றும் இணைய விமர்சனங்களைப் பார்த்து அழகு சாதன பொருள்களை வாங்காமல், மூலப்பொருள்களின் விளக்கப் பட்டியலைப் பார்த்து வாங்குவதே பாதுகாப்பானது.

பெரும்பாலான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களில் Sodium lauryl sulfate (SLS), Sodium laureth sulfate (SLES), Parabens, Formaldehyde உள்ளிட்ட கொடிய ரசாயனங்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, உயிருக்கே ஆபத்து நேரவும் வாய்ப்புள்ளது. தவிர, முடி உதிர்தல், முடி உடைதல், மயிர்க்கால்களில் பாதிப்பு, பொடுகு, தலைமுடி வறட்சி, அரிப்பு, உடல் உறுப்புகளில் பாதிப்பு, அலர்ஜி, இனப்பெருக்கப் பாதிப்பு, நரம்பியல் மண்டல பாதிப்பு மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

மேற்காணும் பாதிப்புகள் ஏற்படாமலிருக்க வீட்டிலேயே இயற்கையாக ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் தயாரித்து பயன்படுத்துவதை வழக்கமாக்கிக்-கொள்ளுங்கள்.  

இயற்கைஷாம்பூ

தேவையானவை: பூந்திக் கொட்டை -  250 கிராம், சீயக்காய் _ 100 கிராம், காய்ந்த நெல்லிக்காய் _ 50 கிராம், வெந்தயம் _ 10 கிராம்.

செய்முறை: பூந்திக்கொட்டை யிலுள்ள விதையை நீக்கிவிடவும். தோல் பகுதியுடன் சீயக்காய், காய்ந்த நெல்லிக்காய், வெந்தயம் சேர்த்து, மாவு அரைக்கும் மெஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும் (மிக்ஸியை பயன்படுத்த வேண்டாம்). பின்னர் அந்தப் பொடியை ஈரப்பதமில்லாத சுத்தமான பாட்டிலில் நிரப்பி வைக்கவும். இதிலிருந்து 2 டீஸ்பூன் அளவு பொடியை எடுத்து இரும்புக் கடாயில் போட்டு, 100 மில்லி அளவு தண்ணீர் சேர்க்கவும். நன்றாக நுரைத்து, ஷாம்பூ பதம் வரும்வரை கொதிக்கவைத்து, அடுப்பிலிருந்து இறக்கவும். இந்தக் கலவையை இரவு முழுவதும் கடாயில் அப்படியே வைக்கவும். மறுநாள் காலை வடிகட்டி, தலைக்குத் தேய்த்து குளிக்கவும்.

குறிப்பு: அரைத்து வைத்துள்ள பொடியை அப்படியே சீயக்காய் போன்றும் பயன்படுத்தலாம்.

இந்த ஷாம்பூவில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்களின் பயன்கள்!

பூந்திக்கொட்டை: Soap Nut  எனப்படும் இது, இயற்கையாகவே நுரைக்கும் தன்மைக்கொண்டது (Natural Foaming Agent). கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது. பூந்திக்கொட்டையை வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளி ஆபரணங்கள் சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.

சீயக்காய்: தலைச்சருமத்தின் பிஹெச் அளவை Ph value)  தக்கவைக்க செய்கிறது. மயிர்க் கால்களுக்குப் புத்துணர்ச்சி தருகிறது. முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சீயக்காயில் வைட்டமின் ‘டி’ மற்றும் ‘சி’ சத்துகளும் உள்ளன.

நெல்லிக்காய்: வைட்டமின் ‘சி’ சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைகொண்டது. முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையாக இருக்கலாம்.

வெந்தயம்: முடிக்குத் தேவையான புரதங்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் வெந்தயத்தில் அதிகளவில் நிறைந்துள்ளது. வெந்தயத்தின் மூலம் கூந்தலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

நேச்சுரல் கண்டிஷனர்

தேவையானவை: ஷியா வெண்ணெய்(Shea Butter)-100 கிராம், ஆர்கன் எண்ணெய் (Argan oil)- 2 டீஸ்பூன், விளக்கெண்ணெய் (Castor oil)  _ 4 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பேனில் (Pan)  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அதன்மீது ஒரு பாத்திரத்தை வைக்கவும். அதனுள் ஷிபா வெண்ணெயைப் போட்டு உருக்கவும் (இதற்கு Double boiler என்று பெயர்). பின்னர் அதனுடன் விளக்கெண்ணெய், ஆர்கன் எண்ணெய்ச் சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். ஆறியதும், எக் பீட்டரால் க்ரீம் பதம் வரும் வரை நன்றாக அடித்து, சுத்தமான பாட்டிலில் அடைக்கவும்.

குறிப்பு: இதை ஃப்ரிட்ஜில் 15 நாட்கள் வைத்திருந்து உபயோகிக்கலாம்.

இந்த கண்டிஷனரில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்களின் பயன்கள்!

ஷியா வெண்ணெய்: ஷியா மரத்தின்(Shea tree) கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பிலிருந்து இந்த வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. கூந்தலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் சிறந்த ஹைட்ரேட்டராக உதவுகிறது.விளக்கெண்ணெய்: தலைமுடியில் பொடுகு, உச்சந்தலையிலிருக்கும் தொற்றை நீக்கும் தன்மை கொண்டது. விளக்கெண்ணெயிலிருக்கும் ‘ரைசினோ லிக் அமிலம்’(Ricinoleic acid) அழற்சியை எதிர்க்கும் தன்மை கொண்டது.

ஆர்கன் எண்ணெய்: ‘திரவத் தங்கம்’ என்றழைக்கப்படும் இந்த எண்ணெய், மொரோக்கோவிலிருக்கும் ஆர்கன் மரத்தின் பழங்களிலிருந்து எடுக்கப்படுகின்றது. பொடுகு, அரிப்பு நீங்க உதவுவதோடு, முடிக்கு ஈரப்பதமும் (Moisturize)அளிக்கிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்