பெண்களை முதலாளியாக்கும் இயற்கை நாப்கின்

ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் இயங்கிவருகிறது ‘காமன் சர்வீஸ் சென்டர்’ என்கிற மத்திய அரசின் பொதுச்சேவை மையம்-. இதை சுபாஷ் & சுதா என்கிற தம்பதி நடத்திவருகின்றனர்.
இந்த மையத்தில், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ஆன்லைனில் பதிவுசெய்து தருகிறார் சுதா சுபாஷ். தவிர, மத்திய அரசின் கடனுதவியுடன் குடிசைத் தொழிலாக இயற்கை நாப்கினும் தயாரித்துவருகிறார். அதுமட்டுமல்ல... விருப்பப்படும் பெண்களுக்கு இயற்கை நாப்கின் தயாரிப்புக் குறித்து கற்றுத்தந்து, அவர்களை முதலாளியாக்கி அழகு பார்க்கிறார்.
இதையறிந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், அந்த மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, மாவட்டத்தில் சிறுதொழில் செய்ய விரும்பும் மகளிர் குழுவினருக்கு ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் இங்கு பயிற்சி அளிக்கவும் தொழில் துவங்கவும் போதிய வசதிகள் செய்து தரப்படும்’’ என்றவர், உடனடியாக அதை நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சுதாவிடம் பேசினோம்...
இயற்கை நாப்கின் தயாரிப்பு ஐடியா எப்படி வந்தது..?
‘‘பெண்கள் பலரும் மாதவிடாய் நாட்களை கடுமையான நாட்களாக எண்ணி வெறுக்கின்றனர். அத்தகைய நாட்களை, மனதுக்குப் பிடித்தமான மற்றும் இதமான நாட்களாக மாற்றவேண்டும் என்பது என்னுடைய நீண்டகால கனவு. அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உடலுக்குத் தீங்கிழைக்காத மருத்துவக் குணம் கொண்ட இயற்கை நாப்கின் தயாரிக்கும் முயற்சியில் வெற்றிகண்டேன். பெண்களுக்குப் பெருமளவில் பலன் தரும் இந்தத் தயாரிப்பிற்கு மத்திய அரசு முழு ஆதரவைத் தந்திருக்கிறது. உடலுக்குக் குளிர்ச்சியையும் வெப்பத்தையும் ஏற்படுத்தாமல் சீரான சீதோஷ்ணத்தில் ஒவ்வாமையும் ஏற்படுத்தாத வாழை நார், தேங்காய் நார் மற்றும் பருத்தித் துணி ஆகிய மூலப்பொருள்களைக் கொண்டே நாங்கள் இயற்கை நாப்கின் தயாரிக்கிறோம். பேக்கிங் பிரியாமலிருக்க ஒட்டுவதற்கு மரப்பிசினைத்தான் உபயோகிக்கிறோம். தவிர, விற்பனைக்குத் தயாரான நாப்கின்களை பேக் செய்யும் உறையும்கூட காகிதத்தால் தயாரிக்கப்படுகிறது. எனவே எங்களுடைய இந்தத் தயாரிப்பு பூவையருக்கும் பூமிக்கும் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.’’
சாமான்ய பெண்ணும்கூட இயற்கை நாப்கின் தயாரிக்க முடியுமா..?
‘‘சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்கிற லட்சியமும் ஒரு லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால் போதும்... யார் வேண்டுமனாலும் இந்தத் தொழிலில் இறங்கலாம். ஒருவேளை, முதலீடு செய்ய பணம் இல்லாவிட்டாலும்கூட மத்திய அரசு, ‘முத்ரா’ கடனுதவி திட்டத்தின் மூலம் வங்கிகளில் கடன்பெற வழிகாட்டுகிறது. தவிர, மூலப்பொருள்கள் அனைத்தையும் மத்திய அரசின் பொதுச்சேவை மையமே பல்வேறு மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து, பதப்படுத்தி, மிகக்குறைந்த விலைக்குத் தருகிறது. இதற்கான இயந்திரங்களையும் மத்திய அரசே பிரத்யேகமாகத் தயாரித்து வழங்குவது தனிச்சிறப்பு.’’
நாளொன்றுக்கு எவ்வளவு நாப்கின்கள் உற்பத்திச் செய்யலாம்..?
‘‘ஒரு இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு ஐயாயிரம் நாப்கின்கள் வரை தயாரிக்க முடியும். அத்துடன் பத்து பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கலாம். மாற்றுத்திறனாளிகள், அதிகம் படிக்காதவர்கள்கூட இந்தத் தொழிலில் ஈடுபடலாம். மனதுக்குப் பிடித்த இயற்கை நாப்கின்களை உற்பத்திச் செய்கிறோம் என்பதையும் தாண்டி, அதன் மூலம் குடும்ப வருவாயைப் பெருக்கவும் செய்யலாம். தவிர, பலருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கலாம்.’’
நாப்கின்களை விற்பனை செய்வது எப்படி..?
‘‘இதைத் தயாரித்து விற்பனை செய்யப்போவது பெண்கள். வாங்கி உபயோகப்படுத்தப் போவதும் பெண்கள்தான். எனவே சந்தைப்படுத்துவது எளிது. எங்கும் எதிலும் பெண்கள்தானே இருக்கிறார்கள். தவிர, இதை மகளிர் குழுக்கள் மூலம் அவர்களுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் வியாபார ரீதியாக விற்பனை செய்யலாம். நமக்குத் தெரிந்த மருந்துக்கடைகள் மூலமோ டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களிலோகூட ‘இயற்கை நாப்கின்’ என்று சொன்னால் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதைவிட மகளிர் கல்லூரிகள் மற்றும் மகளிர் விடுதிகளிலும்கூட நேரடியாக விற்பனை செய்யலாம். அரசு அலுவலகங்களிலும் நேரடியாகக் கொண்டு போய் விற்கலாம். அல்லது உயரதிகாரிகளிடம் சொல்லி, மாதத்திற்கு ஒருநாள் ஒவ்வொரு அலுவலகத்திலும் காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்.
நாளடைவில் விற்பனை நன்றாக சூடுபிடித்து நாப்கின் அதிகளவில் தேவைப்பட்டால், இன்னொரு யூனிட்டை துவங்கி தயாரிப்பைத் துரிதப்படுத்தலாம். அல்லது நாமேகூட சம்பளத்திற்கு ஆட்களை வைத்து மேலும் உற்பத்திச் செய்யலாம். இது சிறுதொழில் சார்ந்திருப்பதால் குறைவான கட்டணத்தில் மின்சாரம் பெறமுடியும் என்பது இன்னொரு சிறப்பம்சம். நமக்கு எல்லா செலவுகளும் போக 20 சதவிகிதம் லாபம் கிடைக்கும். மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளோடு நாம் போட்டியிட்டு ஜெயிக்க முடியாது என்பது உண்மை. ஆனால், செயற்கையான நாப்கின், மனித உடலுக்கு மட்டுமல்ல, பூமிக்கும் கேடு விளைவிக்கும். எனவே இயற்கை நாப்கின்களின் தேவை அதிகரிக்கவே செய்யும். இதைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தாலோ அல்லது தீயிட்டு கொளுத்தினாலோ இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் உண்டாகாது.’’
ஆர்வமுடன் வரும் பெண்களுக்கு வழிகாட்டுவீர்களா..?
‘‘நிச்சயமாக வழிகாட்டுவோம். இயற்கை நாப்கின்கள் தயாரிக்க தனிப்பட்ட பெண்களோ மகளிர் குழுக்களோ ஆர்வமாக முன்வந்தால் செய்முறை, இயந்திரம் மற்றும் மூலப்பொருள்கள் கொள்முதல் உள்பட தயாரிப்பு முறைகளையும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சொல்லித் தருகிறோம். தவிர, ஒருவர் சொந்தமாக முதலீடு போடலாம். ஒருவேளை, தொழில் துவங்கவும் வருமானம் ஈட்டவும் ஆர்வமிருந்து போதிய நிதி வசதியில்லாதவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கவும் காத்திருக்கிறது. உழைத்து முன்னேறத் துடிக்கும் பெண்கள் இயற்கை நாப்கின்கள் தயாரிக்கக் கற்றுக்கொண்டால், அவர்கள் முதலாளிகள் ஆவது நிச்சயம்’’ என்று நம்பிக்கையூட்டுகிறார் சுதா சுபாஷ். .
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை