முட்டையில் இருக்கும் மஞ்சள் கரு அசைவம்...வெள்ளைக் கரு சைவம்

முட்டை என்பது உடல் நலத்துக்கான அவசியம் என்றாகிவிட்ட காலம் இது. ஆனாலும், முட்டை சைவமா? அசைவமா? என்பது இன்றுவரை நம்மிடையே இருந்துகொண்டிருக்கும் கேள்வி. வாய்வழியாகக் கேட்டுக்கொண்டிருந்த காலம் முதல் இன்று சமூக வலைதளங்களில் கேட்கப்படுவதுவரை இதற்கான விடையும் இரண்டு விதமாகவே இருக்கிறது.இதில் பலர், மஞ்சள் கருதான் அசைவம். அதை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துக்கொள்வது சைவம்’ என்று சொல்வதும் உண்டு. மேலும், முட்டை உற்பத்தியில் கோழிகள் சேவலுடன் இணையாமல் செயற்கையான முறையிலேயே முட்டையிட வைக்கப்படுவதால், இப்போது வரும் முட்டைகள் எல்லாமே சைவம்தான்’ என்றும் சொல்கிறார்கள்.
முட்டை சைவமா அசைவமா என்று என்னைக் கேட்டால், இந்த விஷயத்தில் எது சரி என்று ஆராய்ச்சி செய்வதைவிட, அவரவர் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி தீர்மானித்துக்கொள்வதே நல்லது என்றுதான் சொல்வேன். ஏனென்றால், அசைவத்தை நன்றாக உண்ணக் கூடியவர்களில்கூட சிலருக்கு முட்டை பிடிக்காது. அசைவத்தை அறவே தவிர்க்கும் பலரும் முட்டையை ஒதுக்குவதில்லை. ஆகவேதான், இது அவரவர் மனம் சார்ந்த விஷயம் என்று சொல்கிறேன்.மற்றவர்கள் எப்படியோ இருக்கட்டும். நீங்கள் எப்படி? என்று கேட்பவர்களுக்கு, என் சிறுவயது ரகசியம் ஒன்றை சொல்லப்போகிறேன்.
எங்கள் தாத்தா எந்த அளவுக்கு அன்பு நிறைந்தவரோ, அதே அளவுக்குக் கண்டிப்பானவரும்கூட! உணவு விஷயத்தில் இருந்து எல்லாவற்றிலும் ஒரு கட்டுப்பாட்டுடன் இருப்பார். அதில் ஒன்று குழந்தைகளுக்கு முட்டை உண்ணக் கொடுப்பது. நான் எப்படியாவது அதிலிருந்து தப்பித்துவிடுவேன். தாத்தா, பாட்டி இறந்தபிறகுகூட அவர்கள் ஏற்படுத்திய பல பழக்கங்கள் எங்கள் வீட்டில் மாறவே இல்லை.
எங்கள் தந்தை கோழிப்பண்ணை ஆரம்பித்தபோது, அங்கிருந்து தினமும் முட்டைகளைக் கொண்டுவருவார். அந்த முட்டைகளை மறுநாள் காலையில் எங்கள் தாயார், வேகவைத்து எடுத்துவைப்பார். கூட்டுக் குடும்பத்தில் குழந்தைகள் அதிகம். எங்களுக்குத் தனித்தனியாக முட்டைகளைத் தந்து உரித்துச் சாப்பிடச் சொல்வார்கள். எனக்கு முட்டை சாப்பிடவே பிடிக்காது. அம்மாவுக்குத் தெரியாமல் தம்பி, அண்ணனைக் கெஞ்சி, ‘சொல்லக்கூடாது’ என்று சொல்லி என் பங்கு முட்டையை அவர்கள் இருவருக்கும் தந்துவிடுவேன்.
சமையலறையில் முட்டை வேகவைக்க, ஆம்லெட் போட என தனிப் பாத்திரங்கள் இருக்கும். அதற்கென ஸ்பூன், கரண்டி முதல் முட்டை சாப்பிடும் தட்டுகூட தனியான ஒன்றுதான். குழந்தைகள் மட்டும்தான் சாப்பிடுவோம். பெரியவர்கள் சாப்பிட மாட்டார்கள். கல்லூரிக்குச் சென்ற பிறகு, அங்கே பாடமாக வந்தபோது தவிர்க்க முடியாது என்பதால், முட்டை சேர்த்தும் கேக் செய்யக் கற்றுக்கொண்டேன். அப்போது முதல் இப்போதுவரை எனக்கு இந்தக் கேக் விஷயத்தில் ஓர் ஆச்சரியம் உண்டு. அது, முட்டைகூட சாப்பிடாத சைவம் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட முட்டைபோட்ட கேக்கை வேண்டாம் என்று சொல்வதில்லை. இது முட்டை சேர்க்கப்படுவது என்பது தெரியாததால் என்று சொல்லமுடியவில்லை. ஏனென்றால், கேக்கில் முட்டை சேர்க்கப்படுவது பலருக்கும் தெரிந்த விஷயமாகவே இருக்கிறது. அதேசமயம், முட்டை சேர்க்காத கேக்தான் வேண்டும் என்று கேட்பவர்களையும், கேக்கைக் கொடுத்தால், ‘எக் லெஸ் கேக்கா?’ என்று கேட்டு நிச்சயித்துக் கொண்டபிறகே வாங்கிக்கொள்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
கேக் தயாரிப்பை வெளியில் நான் கற்றுக்கொள்ளத் தொடங்கியதும், கேட்டது முட்டையில்லாமல் கேக் செய்வதற்கான விவரங்களைத்தான். முதலில் கற்றுக் கொண்டதும் அதைத்தான்.
எனக்குத் திருமணமான பிறகும், என் குழந்தைகளுக்கு முட்டை தரவேண்டும் என்ற நிலையில் முட்டைக்கென தனி பாத்திரங்கள் வைத்துதான் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தேன். இப்போது பேரக் குழந்தைகள் வரும்போது செய்து கொடுக்கவும் தனியாகத்தான் பாத்திரங்கள் வைத்துக்கொண்டு இருக்கிறேன்.
கல்லூரியில் படிக்கும்போது எங்கள் நியூட்ரிஷன் லெக்சரர் பாலாம்பாள் மேடம், முட்டையைப் பற்றி தனி வகுப்பே எடுத்தார்கள். அது மனதில் பதிந்து இருந்ததால் என் குழந்தைகளுக்குத் தினமும் மாலையில் முட்டை தர ஆரம்பித்தேன்.
வேகவைத்த முட்டை தினமும் அவர்களுக்கு அலுப்பைத் தந்தது. சாப்பிடவும் அதிகம் விரும்பவில்லை. பிறகு ஆம்லெட்டாக, பிரட் டோஸ்டாக விதவிதமாகச் செய்து தர ஆரம்பித்தேன். வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து அதிகம் தேவை. 2 முட்டை சாப்பிட்டால் கிட்டத்தட்ட 15 கிராம் அளவு புரதம் கிடைக்கும். இப்படித் தர ஆரம்பித்ததும் ஒரு யோசனை தோன்றியது. சைவர்கள் பலர் முட்டையை மட்டும் சாப்பிட நினைப்பவர்களுக்கு உதவும்படி முட்டைக்கான ரெசிபிகளையே ஒரு புத்தகமாக எழுதினேன்.
இப்போது 22 வருடங்களாக நானும் எனது கணவரும் முட்டை சேர்த்த கேக்கைகூட சாப்பிட விரும்புவதில்லை. வெளிநாட்டிற்குச் செல்லும்போது சைவ உணவு கிடைப்பது மிகக் கடினம். முட்டை சாப்பிடுபவர்கள் ஓரளவு சமாளிக்கலாம்.
புட்டிங் பற்றிய ரெசிபிகளை கற்றுக்கொண்ட போதும், முட்டை சேர்த்தும் சேர்க்காமலும் பலவிதமான புட்டிங் செய்யும் முறையில் தேர்ந்தேன்.
சரி, முட்டையில் அப்படி என்னதான் சத்துகள் இருக்கின்றன எனக் கேட்டால்,
2 முட்டைகள் 100 கிராம் எனக் கொள்ளலாம். அதிலுள்ள சத்துகள்: 61 கலோரிகள், புரதம் -_ 12.3 கிராம், கொழுப்பு -_ 10.9 கிராம், கொலஸ்டிரால் _- 450 மி.கி. (மஞ்சள் கருவில் மட்டுமுள்ளது), கால்சியம் _- 52 மி.கி., இரும்புச்சத்து _ 2 மி.கி., சோடியம் _- 140 மி.கி., வைட்டமின் ‘ஏ’ _ 140 மி.கி., தயாமின் _ 0.09 மி.கி., ரைபோஃப்ளேவின் _ 0.47 மி.கி., நயாசின் _ 3.68 மி.கி., வைட்டமின் ‘டி’ _- 1.75 மி.கி., வைட்டமின் ‘ஏ’ _- 1.6 மி.கி. இவ்வளவு சத்துகள் இருப்பதால்தான் முட்டை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தாய்ப்பாலிற்குப் பிறகு 6 மாதங்கள் கழித்து, பச்சிளம் குழந்தைக்கு முட்டை தரலாம். அதனைத் தரும் முறை, முட்டையை சூடான கொதிநீரில் போட்டு உடனே எடுத்து உடைத்தால், வெள்ளைக்கரு லேசாக வெந்திருக்கும். அதை மட்டும் தனியாக க்ரீம் போல கடைந்து குழந்தைகளுக்குத் தரும் கஞ்சியோடு சேர்க்கலாம். அதேசமயம், அதனைத் தருவதால் ஒவ்வாமை வராமல் இருக்கின்றதா என்று சோதித்துப் பார்த்த பிறகு தருவதைத் தொடரவேண்டும். முதலில் வாரம் ஒருமுறை என கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆரம்பத்தில் மிகமிகக் குறைவாகத் தந்து படிப்படியாக அவர்கள் வயதிக்கேற்ப சிறிது அதிகரிக்கலாம்.
முட்டை பற்றி சொல்லும்போது நான் முன்பே சொன்ன விஷயம் ஒன்றை மறுபடியும் சொல்லவேண்டியிருக்கிறது. அது, புதிய முட்டையை வேகவைத்தால், வெந்த முட்டையிலிருந்து ஓட்டை எளிதாக உரிக்க முடியாது. பழைய முட்டையில் ஓட்டினை சுலபமாக உரிக்க முடியும். இதனை முட்டையை வேகவைக்கும்போது நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.
நமது அரசாங்கத்தில் முட்டைகளைப் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தும்விதமாக NECC (National Egg Co-ordination Committee) என்று தனியாக ஓர் அமைப்பு உள்ளது. முட்டை குறித்து நான் புத்தகம் எழுதியபோது (1988ம் வருடம்) பலருக்கும் முட்டையில் அவ்வளவாக ரெசிபிகள் செய்ய தெரியாது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் அமைப்பிற்காக ஒரு வகுப்பை இலவசமாக நடத்தக் கேட்டார்கள். பல செய்முறைகள் சொல்லித் தந்தேன். முட்டையைப் பற்றிய விழிப்பு உணர்வு முகாமிற்கும் அழைத்தார்கள்.
உணவுப் பொருள்கள் தயாரிப்பில் சைவத்திற்கென பல விதிமுறைகள் உண்டு. இந்தியன் வெஜிடேரியன் காங்கிரஸில் அரசாங்கத்திடம் போராடி, சைவ உணவுப் பொருள்களில் பச்சை நிறப் பொட்டு (Green Dot) வைக்கும் பழக்கத்தை இந்தியாவில் கொண்டு வந்தார்கள். சிவப்பு நிறப் பொட்டு இருந்தால் அசைவம். இன்றுவரை அந்த நடைமுறை அமலில் உள்ளது. அதிலும் பல மீட்டிங்களுக்குப் போய்வந்தேன் கௌரவ விருந்தினராக! அதில் அவர்கள் முட்டையை சைவத்தில் சேர்க்கவில்லை.
முட்டையில் ஆம்லெட், கிரேவி, பிரியாணி, புலவு, ஊறுகாய், புட்டிங், கேக், குக்கீஸ் என விதவிதமான உணவுகள் செய்யலாம். ஐஸ்க்ரீம் முதல் அல்வா வரை முட்டை இடம்பெறும் வகையில் எண்ணற்ற செய்முறைகள் உண்டு.மறுபடியும் நான் சொல்வது இதுதான். முட்டை சைவமா, அசைவமா என பட்டிமன்றம் போடுவதை விடுத்து, விருப்பம் உள்ளவர்கள் தாராளமாகச் சாப்பிடலாம்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை