தற்கொலை தீர்வல்ல... மனம்விட்டு பேசாதது காரணமா? - மனநல ஆலோசகர் செலினா ஆலோசனை

அனைத்திற்கும் தற்கொலைதான் தீர்வா..? தற்கொலை எண்ணம் வரக் காரணமும், அதிலிருந்து வெளியே வருவதற்கும் மனநல ஆலோசகர் செலினா நம்மிடம் கூறியது.
கேள்வி: இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமான 'டான்ஸர் ரமேஷ்' நேற்று 10-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் மட்டுமல்ல, நிறைய பேர் தற்கொலை செய்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?
பதில்: தற்கொலை முடிவை எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். தற்கொலை என்பது அவசரத்தில் எடுக்கும் முடிவு. தீர்க்கமாக யோசித்து எடுக்கும் முடிவல்ல. எந்தப் பிரச்னை இருந்தாலும் நண்பர்கள், குடும்பத்தினருடன் நெருக்கமானவர்களிடம் முதலில் பேச வேண்டும். செல்போன், டிவி, மீடியாவில் நேரத்தை அதிகம் செலவழிக்கின்றனர். 24 மணிநேரமும் அதிலே நேரத்தை செலவழிக்கின்றனர். மனிதர்களிடம் பேசும் நேரத்தைக் குறைத்து விட்டனர். மனிதர்களுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். சக மனிதர்களால்தான் பிரச்னைகளை சரிபடுத்த முடியும். அனைத்திற்கும் உடனடி தீர்வு வேண்டும் என்ற மனநிலையில் இருந்து முதலில் வெளியே வரவேண்டும்.
கேள்வி: சமீப காலமாக நிறைய பள்ளி மாணவிகளும் தற்கொலை பண்ணியதற்கு கல்விச்சூழல் காரணமா? இல்லை அவர்கள் பெற்றோரிடம் மனம்விட்டு பேசாதது காரணமா?
பதில்: கல்விச்சூழலும் ஒரு காரணம். பாடத்தை முறையாக எடுப்பதில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் கேள்விக்குறிய பதிலை மட்டுமே சொல்லித் தருகின்றனர். பாடத்தை சொல்லிக்கொடுப்பதில்லை. கேள்விக்கு பதில் இதுமட்டும் சொல்லித் தருகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளுடன் மனம்விட்டுப் பேச வேண்டும். அவர்களின் பிரச்னைகளை கேட்க வேண்டும். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதை (Comparison) தவிர்க்க வேண்டும். கல்விச்சூழல் அழுத்தமாக இருக்கிறது. பள்ளிகளிலும் அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கேள்வி: இப்ப இருக்குற குழந்தைகளின் மனநிலை மிகவும் மன அழுத்தத்துடன் இருப்பதற்கான காரணம்?
பதில்: இதில் மிகப்பெரிய காரணம் யாருடன் சரியாக பேசாததே காரணம். வீட்டிற்குள்ளேயே அதிகம் இருக்கின்றனர். குழந்தைகளின் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது. நண்பர்கள், குடும்பத்தினருடன் அதிகம் பேசாமல் இருக்கின்றனர். அதிகமாக வெளியே விளையாட செல்லாமல் இருப்பதாலும், குழந்தைகளின் மன அழுத்தம் அதிகமாவதற்கு ஒரு காரணமாகும். அவர்களுக்கு நல்ல நட்பு வட்டாரத்தை உருவாக்கி தரவேண்டும். அவர்களுக்குத் தேவை நல்ல வழிகாட்டி.
கேள்வி: நிறைய பேர் குறிப்பாக இளம் தலைமுறையினர் கல்வி, காதல் இந்த இரண்டினால் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதைப் பற்றி நீங்கள் அவர்களுக்கு கூறும் அறிவுரை என்ன?
பதில்: பிள்ளைகள் பயம் இல்லாமல் அனைத்தையும் தங்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடிய நபர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். உதாரணமாக 'அப்பா' படத்தில் சமுத்திரக்கனி தன் குழந்தையிடம் பழகுவது போல், பெற்றோர்கள் பழக வேண்டும். அவர்களுடன் நட்புடன் பழகி, அவர்களுடைய நம்பிக்கைக்குரிய நண்பர்களாக பிரச்னைகளை கையாள வேண்டும். தற்கொலைக்கு தூண்டக்கூடிய காரணம், அவர்களை சுற்றி பார்க்கக் கூடிய விஷயங்கள், இதுதான் முடிவு என்று கோபத்தில் அந்த முடிவை எடுக்கின்றனர். அவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் பிரச்சனைகளைக் கூறுவார்கள். தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பிரச்னைகளை பகிர்ந்துகொள்ள வேண்டும். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.
கேள்வி: அனைத்திற்கும் தற்கொலைதான் தீர்வா? இல்லையென்றால் அவர்கள் பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசாதது காரணமா?
பதில்: எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. Mental Support கிடைத்தால் அவர்கள் தற்கொலையை யோசிக்கமாட்டார்கள். கொஞ்சம் துவண்டு நிற்கும்போது பெற்றோர்களோ, நண்பர்களோ கவனித்து கேட்டு நம்பிக்கை ஊட்ட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பிரச்னைகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத நிலையில், மனநல மருத்துவரை அணுகி அதற்கான தீர்வை பெற வேண்டும். வாழ்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. சரியான வழியை பிடித்தால் ஜெயித்து விடலாம். எதற்கும் தற்கொலை தீர்வல்ல.
இவ்வாறு, தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்று நம்மிடம் கூறினார் மனநல ஆலோசகர் செலினா.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை