இன்று உலக சுற்றுச்சூழல் தினம்...!

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்...!

உலக சுற்றுச்சூழல் தினம், கடந்த 50 ஆண்டுகளாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த பூமியின் இயற்கை அழிவைப் பற்றிய விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளாகத்தான் மனிதர்களால் பெருமளவில் உணரப்பட்டு வருகிறது. புவிக்கோளையும், அதன் இயற்கையையும் காப்பாற்ற, சுற்றுச்சூழல் செயல்பாடு பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமானது. உலக அளவில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான், ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டு தோறும் ஜூன் 5-ந் தேதி ‘உலக சுற்றுச்சூழல் தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 -ம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் செயல்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தேர்வு செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது

மனிதர்களான நம்முடைய தவறான நடவடிக்கையால், காற்று மாசுபடுதல், நிலத்தடி நீர் வற்றிப்போவது என்று பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பில் சிக்கி இருக்கிறோம். மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதால், மரங்கள் குறைந்து மழைவளம் குறைகின்றன. முன்பெல்லாம் பருவமழை பொய்க்காமல் பெய்து வந்தது. ஆனால் இப்போதெல்லாம் பருவ மழையை நம்பி எந்த காரியத்தையும் செய்ய முடியாது. பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும், கடல் பகுதியில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாகவும் ஏற்படும் புயலால்தான் மழை பெய்து வருகிறது. 

ஆனாலும் மனித நடவடிக்கைகளால், உலகத்தில் உள்ள சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் தேவையற்ற மாற்றங்களும், அதன் காரணமாக ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும் நம்மை அதிகம் பாதிக்கின்றன. அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க, நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்து வதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தூண்டுகோலாக அமைவதும்தான்.

Find Us Hereஇங்கே தேடவும்