சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டையொட்டி, மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உணவுகளில் சிறுதானியங்களை அறிமுகப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. அதன் பேரில், 2023-ம் ஆண்டில் இந்தியாவை சிறுதானியங்களின் சர்வதேச மையமாக மாற்ற வேண்டும் என்றும், அதனை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் சுமார் 130 நாடுகளில் சிறுதானியங்கள் விளைவிக்கப்பட்ட போதிலும், ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் 50 கோடிக்கும் மேற்பட்டோரின் பாரம்பரிய உணவாக சிறுதானியங்கள் உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு - 2023-ல் மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உணவுகளில் சிறுதானியங்களை அறிமுகப்படுத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டதன்படி, உணவுகளில் 30 சதவீதம் அளவிற்கு சிறுதானியங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காவல் படையில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.