யுபிஎஸ்சி தேர்வில் 4 சதவிகிதம் மட்டுமே தமிழக மாணவர்கள் தேர்ச்சி: கசக்க வைக்கும் அதிர்ச்சி புள்ளி விவரப்பட்டியல்

யுபிஎஸ்சி தேர்வில் 4 சதவிகிதம் மட்டுமே தமிழக மாணவர்கள் தேர்ச்சி: கசக்க வைக்கும் அதிர்ச்சி புள்ளி விவரப்பட்டியல்

107-வது ரேங்க் பெற்று, சென்னை பெரம்பூரில் வசிக்கும் ஜீ ஜீ ஏஎஸ், நேற்று வெளியான யுபிஎஸ்சி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். தென்காசி திருவேங்கடத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணசாமி 117வது ரேங்க் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தார். இருப்பினும், முதல் 100 ரேங்க் பட்டியலில் மாநிலத்தைச் சேர்ந்த எவரும் இடம் பெறாததால், கடந்த பத்தாண்டுகளில் மாநிலத்தின் தேர்ச்சி இந்த ஆண்டு மிகவும் மோசமாக உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"ஒவ்வொரு ஆண்டும், முதல் 100 இடங்களுக்குள் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு பேர் வரை இடம்பெற்று விடுவர். கடந்த ஆண்டு, எங்கள் மாணவர்கள் முதல் 50 இடங்களுக்குள் இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு, முடிவுகள் மிகவும் கவலையளிக்கின்றன" என்று கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் எஸ்.பூமிநாதன் கூறுகிறார். தமிழ்நாட்டிலிருந்து மாநில வாரியாக தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை இல்லை என்றாலும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் தொகுத்த தரவுகள் யுபிஎஸ்சியால் அறிவிக்கப்பட்ட 933 தேர்ச்சி பெற்றவர்களில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் 39 மாணவர்கள் மட்டுமே. இது 4% சதவிகிதம் மட்டுமே.

2014 ஆம் ஆண்டில், தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,126 பேரில், 119 (11%) பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதன் பின்னர் தேர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது. கல்வியாளர்கள் கூறுவது போல், சிறந்த ஊதியங்கள், தனியார் துறையில் இலாபகரமான வேலை வாய்ப்புகள் சிவில் சேவைகளின் பளபளப்பைக் குறைத்துள்ளன. திறமையான மாணவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராவதில் ஆர்வம் காட்டுவதில்லை’’என்கிறார்கள்.

“கடந்த இரண்டு ஆண்டுகளில், தகவல் தொழில்நுட்பத் துறையில் சம்பளம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க கையில் வாய்ப்புகள் இருக்கும்போது எங்கள் மாணவர்கள் சிவில் சர்வீசஸ்களுக்கு தயாராவதில் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஒதுக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை”என்கிறார் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கல்வித் தலைவர் எஸ்.சந்துரு.

இதுகுறித்து சந்துரு கூறுகையில், “முன்பு, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து 30 முதல் 35 பேர் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எங்கள் பயிற்சி மையங்களில் ஒவ்வொரு ஆண்டும் சேர்ந்தனர். ஆனால், கடந்த ஆண்டு அரிதாகவே இல்லை. யுபிஎஸ்சியில் சேரும் மாணவர்களின் தரம் மோசமடைந்துள்ளது. எனவே அது வெளிப்படையாக தேர்ச்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதற்காக பயிற்சி மையத்தில் சேர்வதை நாங்கள் கவனித்துள்ளோம். கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்’’ என்கிறார்.

‘’சிவில் சர்வீசஸ் தகுதி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சமீபத்திய பட்ஜெட்டில் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "புதிய திட்டத்தை செயல்படுத்திய பிறகு, அனைத்தும் சிறப்பாக மாறும் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.


2022 ஆம் ஆண்டிற்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணிக்கு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஆண்கள் 613 பேர். பெண்கள் 320 பேர்.

யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே சென்னையைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி அகில இந்திய அளவில் 107வது இடம் பிடித்து, தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். தமிழ் இலக்கியத்தை எடுத்து படித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இவரது தந்தை எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் கல்லூரியில் படித்தவர். வெற்றிபெற்றது குறித்து ஜீஜீ கூறுகையில்;, ஐஎப்எஸ் ஆக வேண்டும் என்பது ஆசை. சிறு வயதில் பத்திரிக்கையாளராக வேண்டும் என ஆர்வம் இருந்தது. பள்ளிப்படிப்பு முதலே செய்தித்தாள் வாசிப்பதில் ஆர்வம். இதுதான் தேர்வில் வெற்றிபெற உதவியது. ஒராண்டு கவனம் செலுத்தி படித்தாலே தேர்ச்சி பெற்று விடலாம்.’’ என்கிறார்.

நாமக்கல் மாவட்டம் தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன் தமிழகத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். தென்காசி அருகே திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதந் தனலட்சுமி தம்பதியரின் மகன் ராமகிருஷ்ணன். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த அவர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பொறியியல் துறை பணியாளர்களுக்கான தேர்வி வெற்றிபெற்றார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்கிற முயற்சியில் 2019ம் ஆண்டு முதல் முயற்சி செய்து வந்தார். கடந்த ஆண்டு எழுதிய தேர்வில் நான்காவது முறை எழுதி வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்திய அளவில் 117வது இடத்தையும் தமிழக அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

பண்ட்ருட்டி அருகே முந்திரி விவசாயி மகள் சுஷ்மிதா தேர்ச்சி பெற்றுள்ளார். இந்திய அளவில் 528வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சகோதரி ஐஸ்வர்யா 2020ம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது பொன்னேரி துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் இருந்து சென்னையைச் சேர்ந்த மதிவதனி 447ஆவது இடத்தையும், எழிலரசன் 523வது இடத்தையும், குடியரசு என்கிற அரசு ஊழியர் 849வது இடத்தையும் ராகுல் 858வது இடத்தையும், தென்காசியை சேர்ந்த சுப்புராஜ் தமிழில் தேர்வெழுதி 621 இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழ் மொழியில் யுபிஎஸ்சி தேர்வை எழுதிய சுப்புராஜ், தற்போது டேக்ராடூனில் ஐஎஃப்எஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com