கடந்த 22.5.2023ம் தேதி காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயன் மனு வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் முத்துமணி தலைமையில் தனியார் பள்ளி நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில்தான் அவர்கள் கட்டாய கல்வி சட்ட நிதியை அரசு தரவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
இது குறித்து தலைவர் முத்துமணி கூறுகையில், ’’கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் கடந்த 2021--2022ம் ஆண்டிற்கான கல்வித் தொகையை அரசு இன்னமும் விடுவிக்கவில்லை. வேறு துறைக்கு அந்த நிதி மாற்றப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 138 பள்ளிகளுக்கு சுமார் 36 கோடி ரூபாய் விடுவிக்கப்படாமல் இருக்கிறது. இதனால், சுமார் 3000 மாணவர்களுக்கு கல்வித்தொகை வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டின் மற்ற எல்லா மாவட்டங்களிலும் இந்தத் தொகை வழங்கப்பட்டு விட்டது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் வழங்கப்படாதது ஏன் என்று கலெக்டரிடமும் கேட்டோம், விசாரிக்கிறேன் என்று மட்டும் சொன்னார்’’ என்றார்.