தமிழகம் முழுவதிலும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியாகி பிளஸ்-1 அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவ- மாணவியர் சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்க விஷயம். இந்த நிலையில் பிளஸ்-1 வகுப்பில் நான்கு பாடப்பிரிகளை ரத்து செய்திருக்கிறது அரசு.
இது குறித்து நெல்லை மாவட்ட பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மனோகரன் கூறுகையில், ’’அரசு பள்ளிகளில் வேளாண் அறிவியல், துணி நூல் தொழில்நுட்பம், அடிப்படை மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என நான்கு பாட பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இப்பாடப்பிரிவில் சேர விண்ணப்பித்த மாணவர்கள் வேறு பாட பிரிவில் சேருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தப் பாடப் பிரிவில் இதுவரை பணியாற்றிய ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு கட்டாய இடமாற்றம் செய்யபப்டுகிறார்கள்.
இந்த நான்கு பாடப்பிரிவுகளில் 2001ம் ஆண்டு அறிமுகமான வேளாண் அறிவியல் அறிவியல் பாடத்திற்கு மாணவர்கள் மத்தியில் தனி மவுசு. இந்தப் படிப்பை படித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்விக்கு சென்றிருக்கிறார்கள். இந்த ஆண்டு திண்டுக்கல் மார்க்கம்பட்டி, தஞ்சாவூர் கண்ணுகுடி, திருநெல்வேலி, திருக்குறுங்குடி உள்ளிட்ட 12 இடங்களில் வேளாண் அறிவியல் பாடப்பிரிவு மூடப்படுகிறது. இது வேளாண் கல்வி படிக்க நினைக்கும் மாணவ -மாணவியரின் எதிர்காலத்தை சிதைப்பதாகும்.
எனவே வேளாண் அறிவியல் படிப்பு இருக்கும் 293 பள்ளிகளிலும் இதே படிப்பு தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்கல்வியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வேலைவாய்ப்பு திறன் பாடத்தை மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்திற்கு உதவும் வகையில் அமைக்க வேண்டும்’’ என்றார்.
இது குறித்து நெல்லை கல்வி அலுவலர் மணியிடம் கேட்ட போது, ’’பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவது பற்றி அலுவலக ரீதியாக உத்தரவு எதுவும் வரவில்லை’’ என்றார்.