10th Result: இரு கைகளை இழந்தும் நம்பிக்கை இழக்காத சாதனை மாணவன் - முதல்வர் வாழ்த்து

நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்
க்ரித்தி வர்மாவுக்கு ஸ்வீட் கொடுக்கும் தாய்
க்ரித்தி வர்மாவுக்கு ஸ்வீட் கொடுக்கும் தாய்

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கியதால் சிறுவயதிலேயே இருகைகளையும் இழந்த மாணவன், தன்னம்பிக்கையுடன் படித்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மாணவனை பாராட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியின் மகன் க்ரித்தி வர்மா. இவர் சிறுவயதில் வீட்டு மாடியில் விளையாடி கொண்டிருந்த போது மின்கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி இரண்டு கைகளையும் இழந்துள்ளார். தந்தை பிரிந்து சென்று விட்ட நிலையில் எந்த ஆதரவும் இல்லாததால் தாய் கஸ்தூரி தனது இரண்டு கைகள் இல்லாத மகனுடன் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜீனூர் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்தார்.

இந்நிலையில் இருகைகளை இழந்தும் தன்னம்பிக்கையை இழக்காத க்ரித்தி வர்மா விடாமுயற்சியுடன் படித்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயெ முதலிடம் பிடித்துள்ளார். இம்மாணவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், “பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள். அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com