மத ஒற்றுமைக்கு அடையாளம்: இஸ்லாமியர்களைக் கெளரவித்த ஆலங்குடி சிவன் கோயில் நிர்வாகம்
மதத்தின் பெயரால் அரசியல் சர்ச்சைகள், மோதல்கள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் சிவன் கோயில் கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியர்கள் சீர் எடுத்ததும், அவர்கள் மேடையேற்றி கௌரவிக்கப்பட்டதும் இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு அடையாளமாகி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் கடந்த மார்ச் 27ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் மண்டலாபிஷேகம் ( 48வது நாள் நிகழ்வு) இன்று (15.05.23) நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக நேற்று இரவு இந்த கோவில் கும்பாபிஷேகத்தை நடத்திய ரவி என்கிற சொர்ண பைரவா சிவாச்சாரியாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் ஆலங்குடி நகருக்குள் உள்ள இரண்டு பள்ளிவாசல்களை சேர்ந்த இஸ்லாமிய பெருமக்களையும் அழைத்து மேடையில் ஏற்றி சால்வைகள் அணிவித்து சான்றிதழும் வழங்கி கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு செய்தார்கள்.
விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்த பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் இஸ்லாமிய பெருமக்களுக்கு சால்வைகள் அணிவித்து பாராட்டினார். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பாக கோவிலுக்கு சீர் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. இது அனைத்து கோவில்களிலும் நடைபெறும் வழக்கமான ஒரு நிகழ்வு தான் என்றாலும் ஆலங்குடி சிவன் கோவிலுக்கு இஸ்லாமிய பெருமக்கள் ஏராளமான பொருட் செலவு செய்து சீர் எடுத்து வந்து குடமுழுக்கு நிகழ்வில் பங்கெடுத்து கொண்டனர்.
அதேபோல் கிறிஸ்தவ பெருமக்களும் வந்திருந்தனர். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பெருமக்கள் இந்த ஊரில் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதற்கு சான்றாக அமைந்தது இந்த நிகழ்வு. இந்த ஒற்றுமையை மேலும் வலியுறுத்தும் விதமாகத்தான் இவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
- ஷானு.