சீர்காழி அருகே திருநாங்கூரில் பிரசித்தி பெற்ற ரிஷப சேவை விழா நடத்த இரு தரப்பினர் அனுமதி கேட்டுள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ளது திருநாங்கூர். இந்த ஊரைச்சுற்றிலும் புகழ்பெற்ற பல்வேறு வைணவ திவ்ய தேசங்களும், சிவ திருத்தலங்களும் அமைந்திருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் இந்தத் திருநாங்கூரைச்சுற்றியிருக்கும்11 திவ்ய தேசங்களில் இருந்து பெருமாள்கள் எழுந்தருளும் கருடசேவை விழா மிகச்சிறப்பாக நடைபெறும். அதேபோல் திருநாங்கூரில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திர தினத்தன்று 12 சிவாலயங்களில் இருந்து இறைவன் ரிஷப வாகனத்தில் ஒரே இடத்தில் திருமணக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ரிஷபவாகன சேவை விழாவும் மிகவும் பிரசித்தம். இந்த ரிஷப வாகன காட்சியைக் கண்டு வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பேறு, திருமணம் வரம் மற்றும் சகல செல்வங்களும் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த விழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது வெளியூர் பக்தர்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்வார்கள்.
இந்த ஆண்டு விழா வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் வழக்கமாக இந்த விழாவினை நடத்துவோர் அல்லாமல் வேறு ஒரு தரப்பினரும் நாங்கள்தான் விழாவை நடத்துவோம் எனப் போர்க்கொடி உயர்த்த இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து பொதுமக்களிடையே பெரும் பதட்டமும் ஏற்பட்டது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் இந்தப் பிரச்னை தொடர்பாக சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் மண்டல தாசில்தார் ரஜினி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் திருநாங்கூர் கோவில் செயல் அலுவலர் முருகன், திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினருக்கும் காரசார விவாதம் ஏற்பட்டுக் கைகலப்பில் முடியும் சூழலும் ஏற்பட்டதால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையின் முடிவில், இரு தரப்பினரும் இணைந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு விழாவை நடத்த ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது.
இருப்பினும் வரும் 20ம் தேதி விழா நடைபெறும் தினத்தன்று அதிகப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
-ஆர்.விவேக் ஆனந்தன்