கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக அமைச்சர்கள் பின்னிடைவை சந்தித்து தோல்வி முகத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் காங்கிரஸின் வெற்றிவாய்ப்பை உற்சாகமாய் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வெற்றி வாய்ப்புகளை நெருங்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களூருவிற்கு வருமாறு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் அதையும் கடந்து பெரும்பான்மை வகிக்கிறது.
கடந்த முறை கோவாவில் நூலிழையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த காங்கிரஸ், இந்த முறை கர்நாடக தேர்தல் விவகாரத்தில் கவனமுடன் காய் நகர்த்தி வருகிறது. இதற்காக தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் பெங்களூரு வருமாறு தலைமை உத்தரவிட்டுள்ளது. பெரும்பான்மைக்கு நெருக்கத்தில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில், அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஒரே இடத்தில் தங்க வைத்து, பாதுகாக்க காங்கிரஸ் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அரியணை யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் சித்தராமையாவுக்கா? டி.கே.சிவகுமாருக்கா? என கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரும் அவரவர் தொகுதியில் பெரும்பான்மை காட்டி வந்த நிலையில் மீண்டும் கனகபுராவை கைப்பற்றினார் டி.கே.சிவக்குமார். "பா.ஜ.க.வை ஆட்சியமைக்க விடாமல் செய்ய எதையும் செய்வோம். கர்நாடகாவின் நலனுக்காக எனது தந்தை முதலமைச்சராக்கப்பட வேண்டும்" என சித்தராமையாவின் மகன் யதிந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”தவறான அரசுக்கு எதிராக மக்கள் சேர்ந்துக் கொடுத்த அடி இது. அமித்ஷா, மோடி மற்றும் பல பாஜக முதலமைச்சர்கள் இங்கு வந்து தங்கள் பலத்தைக் காட்டினார்கள். ஆனால் மக்கள் பாஜகவை தூக்கி எறிந்து விட்டார்கள்” என தெரிவித்தார். மட்டுமல்லாமல் மேலிட பொறுப்பாளர்கள் பெங்களூரு வந்து அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என்றார்.